ரஷ்யாவிடமிருந்து விலகியிருங்கள்: இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் அமெரிக்கா!

ரஷ்யாவிடமிருந்து விலகியிருங்கள்: இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் அமெரிக்கா!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த மாதம் நடந்து முடிந்த குவாட் அமைப்பின் கூட்டத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாகப் பேசிய அமெரிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ், “உக்ரைனை ரஷ்யா ஊடுவினால், சட்டரீதியான சர்வதேச ஒழுங்குக்குக் கட்டுப்படும் நாடான இந்தியா அமெரிக்காவுக்குத் துணை நிற்கும்” என்று கூறியிருந்தார்.

எனினும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அதேபோல, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிராக ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்காமல் விலகி நின்றது.

இதற்கு முக்கியக் காரணம், வரலாற்று ரீதியாக ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் நட்புறவு. அதுமட்டுமல்லாமல் சீனாவும் பாகிஸ்தானும் ஏற்படுத்திவரும் சவால்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எஸ்-400 ரக விமான எதிர்ப்பு சாதனங்களை இந்தியா பெருமளவில் சார்ந்திருக்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் ராணுவத் தளவாடங்களில் ஏறத்தாழ 60 முதல் 70 சதவீதம் வரை ரஷ்யத் தயாரிப்புகள்தான்.

2018 அக்டோபரில் 5 பில்லியன் டாலர் மதிப்பில், ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு எச்சரித்ததையும் மீறி அதில் இந்தியா கையெழுத்திட்டது.

இந்தச் சூழலில், உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாரத் தடைகள் அந்நாட்டின் கழுத்தை இறுக்கும் எனக் கருதப்படுகிறது. ரஷ்ய ராணுவ அதிகாரிகள், தொழிலதிபர்கள், வங்கிகள் எனப் பல தரப்பு மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து, 2018-ல் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, ராணுவத் தளவாடங்கள் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வரத் தொடங்கியிருக்கின்றன.

இந்தச் சூழலில், ரஷ்யாவின் வங்கிகள் மீது ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதால், அந்நாட்டிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்களை வாங்கும் எந்த ஒரு நாட்டுக்கும் கடும் சிரமங்கள் ஏற்படும் என அமெரிக்க நாடாளுமன்றத் துணைக்குழு ஒன்றின் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை உதவிச் செயலர் டொனால்டு லூ தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவலைக் கண்டிப்பதில் உலக நாடுகளுக்கு இடையே இருக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு குறித்து இந்தியாவிடம் அமெரிக்க அதிகாரிகள் பேசியிருப்பதாகவும் அவர் கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா எனும் கேள்விக்குப் பதிலளித்த அவர், இவ்விஷயத்தில் அமெரிக்க அதிபர் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் எடுக்கும் முடிவு குறித்து தன்னால் முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இறுதியாக, “இந்தியா உண்மையில் எங்கள் மிக முக்கியமான பாதுகாப்புக் கூட்டாளி. அந்த நட்புறவை நாங்கள் மதிக்கிறோம். அதேவேளையில், ரஷ்யா மீது எழுந்துவரும் கடும் கண்டனத்தின் அடிப்படையில், அந்நாட்டிடம் இருந்து தன்னை மேலும் விலக்கிக்கொள்வதற்கான நேரம் இது என இந்தியா உணரும் என நம்புகிறேன்” என்று டொனால்டு லூ கூறினார்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.