‘இன்னும் தள்ளுபடி விலையில் எண்ணெய் வேண்டும்’- இந்தியாவின் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா ரஷ்யா?

‘இன்னும் தள்ளுபடி விலையில் எண்ணெய் வேண்டும்’- இந்தியாவின் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா ரஷ்யா?

85 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் தேவையை இறக்குமதி மூலம் இந்தியா பூர்த்திசெய்துகொள்கிறது. அதில் ரஷ்யாவின் பங்கு மிக அதிகம். அதேபோல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, ரஷ்யாவின் வருவாய்க்கு மிக முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுடனான எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய நாடுகள் கணிசமாகக் குறைத்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியில் 17 சதவீதம் சரிவு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா பெரிதும் சார்ந்திருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் விலையை 70 டாலருக்குக் கீழ் குறைத்து தள்ளுபடி வழங்க வேண்டும் என இந்தியா கோரியிருக்கிறது.

பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர், இதுவரை 40 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்திருக்கிறது இந்தியா. அரசு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி போன்ற தனியார் நிறுவனங்களும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவருகின்றன. அது 2021-ல் ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்ததைவிட 20 சதவீதம் அதிகம். தள்ளுபடி விலையில் ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துவருகிறது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதையும், ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதையும் அதிருப்தியுடன் கவனித்துவருகின்றன. எனினும், அதற்குத் தடைபோடும் அளவுக்குச் சென்றுவிடவில்லை. ஆனால், கடல்சார் தொழிலில் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் அந்நாடுகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன.

இதற்கிடையே, ஓபெக் ப்ளஸ் கூட்டமைப்பு நாடுகளுடனான பரிவர்த்தனையை இலகுவாக்கும் வகையில், ரஷ்யாவிடமிருந்து இன்னும் குறைந்த விலையில் எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா விரும்புகிறது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் சர்வதேச அளவில் 105 டாலர் எனும் அளவில் விற்பனையாகிறது.

இந்நிலையில், ஒரு பேரலுக்கு 70 டாலருக்கும் குறைவாகக் கச்சா எண்ணெய்யை வழங்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் இந்தியா கோரியிருக்கிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in