அமெரிக்க - இந்திய உறவில் சிக்கல் ஏற்படுமா? - அடுத்தடுத்து வெளியாகும் எச்சரிக்கைகள்

லிஸா கர்ட்டிஸ்
லிஸா கர்ட்டிஸ்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்காவை அசவுகரியத்தில் ஆழ்த்தியிருப்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட தலீப் சிங், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜோ வில்ஸன் போன்றோர் இந்தியாவை எச்சரிக்கும் விதமாகப் பேசிவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் இந்திய விவகாரங்களைக் கவனித்துவந்த லிஸா கர்ட்டிஸ் இந்தியாவை எச்சரிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார். இந்திய உறவு தொடர்பாக அப்போதைய அதிபர் ட்ரம்புக்கு ஆலோசனை வழங்கிவந்தவர் அவர்.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர் எனும் விலையில் இந்தியாவுக்கு வழங்குவதாக ரஷ்யா கூறியிருக்கிறது. ரூபாய் - ரூபிள் பரிவர்த்தனை மூலம் இந்த இறக்குமதியை செய்துக்கொள்ளலாம் என்றும் இரு நாடுகளும் பேசியிருக்கின்றன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிருப்தியடைந்திருக்கின்றன. அமெரிக்க அரசின் சர்வதேசப் பொருளாதாரத்துக்கான தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகப் பதவி வகிக்கும் தலீப் சிங், சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது, தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுக்கலாம் என அவர் எச்சரித்திருந்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ வில்ஸன் எனும் உறுப்பினர் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர். உக்ரைன் போர் தொடங்கிய நிலையில் ரஷ்யா குறித்து இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாட்டை விமர்சித்துவருகிறார். சமீபத்தில், ரஷ்ய ராணுவத் தளவாடங்கள் இறக்குமதியைத் தொடர்வது குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, அப்படிச் செய்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில், “ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கமான உறவு, அமெரிக்க - இந்திய உறவின் எப்போதுமே எரிச்சலான அம்சமாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனாலும், இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது நியாயமற்ற வகையில் ரஷ்யா ஊடுருவல் நடத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டுடனான உறவை இந்தியா மாற்றிக்கொள்ளும் எனும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன” என்று லிஸா கர்ட்டிஸ் கூறியிருக்கிறார்.

மேலும், “ரஷ்ய ராணுவத் தளவாடங்களைச் சார்ந்திருக்கும் சூழலை இந்தியா ஒரே இரவில் மாற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது என்பதாலும், பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நிலை இருப்பதாலும் இந்தியாவின் நிலைப்பாட்டில் இருக்கும் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அதையும் தாண்டி ரஷ்யாவுடனான உறவில் இந்தியா மாறுதல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இரு தரப்பு உறவில் இதுவரை இல்லாத சூழல் நிலவுகிறது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும், ஐநா பொதுச் சபையிலும் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததைச் சுட்டிக்காட்டியிருக்கும் லிஸா கர்ட்டிஸ், அதையெல்லாம் அமெரிக்கா சகிப்புத்தன்மையுடன் அணுகியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in