‘அமெரிக்காவின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இந்தியாவுக்கும் கருத்துகள் உண்டு!'

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி
‘அமெரிக்காவின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இந்தியாவுக்கும் கருத்துகள் உண்டு!'

இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். இதில் உக்ரைன் போர் நிலவரம், எண்ணெய் இறக்குமதி, பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் ஆகியோரிடம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே, இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் அமெரிக்க எம்.பி இல்ஹான் ஓமர், அதுகுறித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சிக்கத் தயங்குவது ஏன் எனக் கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீரில் 370-வது சட்டக்கூறு நீக்கம், ஹிஜாபுக்குத் தடை உள்ளிட்ட விவகாரங்களின் அடிப்படையில் இந்தக் கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, 2+2 பேச்சுவார்த்தையின் இடையே நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, “இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்துவருகிறது” என ஆன்டனி பிளிங்கன் கூறியிருந்தார். அதுகுறித்து அவர் விளக்கமாக எதையும் குறிப்பிடவில்லை. அதேசமயம், இந்திய அமைச்சர்கள் இருவரும் அதுகுறித்து அப்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “இந்தியாவைப் பற்றி தங்கள் கருத்தைக் கொண்டிருக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மனித உரிமைகள் குறித்துப் பேசப்படவில்லை. அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான விவகாரங்களில்தான் கவனம் செலுத்தப்பட்டது. ஒருவேளை மனித உரிமைகள் குறித்த விவாதங்கள் எழுந்தால், அதைப் பற்றி வாய்திறந்து பேச இந்தியா தயங்காது” என்றார்.

மேலும், “அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து நாங்களும் கண்ணோட்டம் கொள்வது உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

Related Stories

No stories found.