ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கக் கூடாது!

மீண்டும் இந்தியாவை அறிவுறுத்தும் அமெரிக்கா
ஜென் ஸாகி
ஜென் ஸாகி

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு மற்றும் பண்டங்களை இறக்குமதி செய்வதை அதிகரித்துக்கொண்டே செல்லக் கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியிருக்கிறது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல தரப்பிலிருந்து பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுவருகின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் ஏற்றுமதி செய்துவந்த ரஷ்யா தற்போது அதில் பெரும் முட்டுக்கட்டைகளைச் சந்திக்கிறது. இதையடுத்து, பொருளாதாரச் சிக்கலைத் தவிர்க்கும் வழிகளில் இறங்கியிருக்கும் ரஷ்யா, இந்தியாவுக்குத் தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய முன்வந்திருக்கிறது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர் எனும் விலையில் இந்தியாவுக்கு வழங்குவதாக ரஷ்யா கூறியிருக்கிறது. ரூபாய் - ரூபிள் பரிவர்த்தனை மூலம் இந்த இறக்குமதியை செய்துக்கொள்ளலாம் என்றும் இரு நாடுகளும் பேசியிருக்கின்றன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிருப்தியடைந்திருக்கின்றன. அமெரிக்க அரசின் சர்வதேசப் பொருளாதாரத்துக்கான தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகப் பதவி வகிக்கும் தலீப் சிங், சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது, தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுக்கலாம் என அவர் எச்சரித்திருந்தார்.

பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ்
பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ்

கடந்த வாரம் டெல்லி வந்திருந்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் பொருளாதாரத் தடைகளைக் கடந்து இந்தியாவும் ரஷ்யாவும் பரிவர்த்தனை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தொழிலதிபர்களுடன் கடந்த வாரம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தள்ளுபடி விலையில் எண்ணெய் கிடைக்கும்போது அதை இந்தியா வாங்குவதில் என்ன தவறு என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாகியும் தலீப் சிங்கின் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜென் ஸாகி. அப்போது, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் விஷயத்தில் இந்தியா மற்றும் சீனாவைத் தடுக்கும் வகையில் அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்குமா எனும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நாங்கள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை ஒவ்வொரு நாடும் பின்பற்ற வேண்டும். இதை உலகம் முழுவதும் நாங்கள் அமல்படுத்துகிறோம்” என்று கூறினார்.

தலீப் சிங்
தலீப் சிங்

ஐரோப்பிய நாடுகள் அதிகமாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், இந்தியா 1 முதல் 2 சதவீதம் வரைதான் இறக்குமதி செய்கிறது என்று இந்தியா வந்திருந்த தலீப் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர், அந்த குறைந்த அளவு இறக்குமதியையும் நிறுத்தவும், ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் நிலையைத் தவிர்க்கவும் அமெரிக்கா உதவும் எனக் கூறியிருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டிய ஜென் ஸாகி, “இந்தியா சென்றிருந்த தலீப் சிங், அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரிக்கும் என நாங்கள் நம்பவில்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in