40,000 டன் கூடுதல் டீசல்: இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியா!

40,000 டன் கூடுதல் டீசல்: இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியா!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு, அண்டை நாட்டுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் இந்தியா தொடர்ந்து உதவிகளைச் செய்துவருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால், எரிபொருள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்துவந்த நிலையில், கடந்த மாதம், எரிபொருள் இறக்குமதி செய்ய கூடுதலாக 500 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியது இந்தியா. இதுவரை 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளையும் இந்தியா அந்நாட்டுக்கு அனுப்பி உதவியிருக்கிறது.

இந்நிலையில், இலங்கைக்குக் கூடுதலாக 40,000 டன் டீசலை கடனுதவியாக இன்று வழங்கியிருக்கிறது இந்தியா. இந்தத் தகவலை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. அரிசி, மருந்துகள், பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தக் கப்பல் நாளை (மே 22) இலங்கை தலைநகர் கொழும்புவைச் சென்றடையும்.

சென்னையிலிருந்து இலங்கைக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுசெல்லும் முதல் கப்பலின் பயணத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (மே 18) கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 9,000 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 24 டன் உயிர் காக்கும் மருந்துகள் என மொத்தம் 45 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அக்கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு (எஃப்.ஏ.ஓ) தெரிவித்திருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in