சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டெண்ணில் கடைசி இடத்தைப் பிடித்த இந்தியா!

பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட மோசம்
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டெண்ணில் கடைசி இடத்தைப் பிடித்த இந்தியா!

சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கைக்கான யேல் மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச புவி அறிவியல் தகவல் வலைப்பின்னல் மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டெண் பட்டியலில் டென்மார்க் முதலிடம் பெற்றிருக்கிறது.

.

பிரிட்டன், பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்திருக்கின்றன. கடந்த சில வருடங்களில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை அந்நாடுகள் பெற்றிருக்கின்றன.

சுற்றுச்சூழல் சார்ந்த 11 பிரச்சினைகளின் அடிப்படையில், செயல்திறன் குறிகாட்டிகளின் துணையுடன் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாடுகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் உயிர்சக்தி ஆகியவற்றில் 180 நாடுகளின் செயல்பாடுகள் இதில் மதிப்பிடப்படுகின்றன.

இதில் கடைசி இடம் இந்தியாவுக்குத்தான். பட்டியலில் 18.9 புள்ளிகள் பெற்று 180-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மியான்மருக்கு 19.4 புள்ளிகள், வியட்நாமுக்கு 20.1 புள்ளிகள், வங்கதேசத்துக்கு 23.1 புள்ளிகள், பாகிஸ்தானுக்கு 24.6 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.

இந்தப் பட்டியலில், பணக்கார ஜனநாயக நாடுகளின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு 20-வது இடம் கிடைத்திருக்கிறது. அதேசமயம், இந்தப் பட்டியலில் பொதுவாக அமெரிக்கா 43-வது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவுக்கு 112-வது இடமும் சீனாவுக்கு 161-வது இடமும் கிடைத்திருக்கின்றன.

என்ன காரணம்?

கடைசி இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மையைவிடவும் பொருளாதார வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பவை எனக் கருதப்படுகிறது. உள்நாட்டுக் கலகம் உள்ளிட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் நாடுகளும் இப்பட்டியலில் கடைசி இடங்களைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை காற்றின் தரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதும், பசுங்குடில் வாயு உமிழ்வு வேகமாக அதிகரித்துவரும் இந்தப் பட்டியலில் கடைசி இடம் பிடிக்க முக்கியக் காரணங்கள் என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நிலைமை மோசமாகும்

2050-ம் ஆண்டுவாக்கில் சீனாவும் இந்தியாவும் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியாவும் சீனாவும் எடுத்துவரும் நிலையிலும் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது.

இதே நிலை நீடித்தால் 2050-ம் ஆண்டுவாக்கில் மீதமுள்ள உலகளாவிய பசுங்குடில் வாயு உமிழ்வுகளில் 50 சதவீதம் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளால் மட்டுமே உருவானதாக இருக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தவறான திசையில் செல்வதாகவும் எச்சரித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in