‘உக்ரைன் விவகாரத்தில் எங்களுக்கும் இந்தியாவுக்கும் வெவ்வேறு நிலைப்பாடு!’

வெளிப்படையாக அறிவித்த நார்வே பிரதமர்
‘உக்ரைன் விவகாரத்தில் எங்களுக்கும் இந்தியாவுக்கும் வெவ்வேறு நிலைப்பாடு!’
பிரதமர் மோடியுடன் நார்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோரா

மூன்று நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற பிரதமர் மோடி, டென்மார்க்கில் நடந்த இந்தியா - நார்டிக் நாடுகளின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவருடன் நார்டிக் நாடுகளின் தலைவர்கள் பல்வேறு அம்சங்கள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2021 அக்டோபரில் நார்வே பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாகப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஜோனஸ் கார் ஸ்டோரா.

2018-ல் ஸ்வீடன் தலைநர் ஸ்டாக்ஹோமில் இந்தியா - நார்டிக் நாடுகளின் முதல் மாநாடு நடைபெற்றது. வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லான்டிக் நாடுகள் என அழைக்கப்படும் ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன் இரண்டாவது கூட்டத்தில் நேற்று மோடி கலந்துகொண்ட நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து இந்தியாவும் நார்டிக் நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருப்பதை ஜோனஸ் கார் ஸ்டோரா வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா ஒரு வளர்ந்துவரும் நாடு. அதன் பொருளாதாரம் விரைவாக வளர்ந்துவருகிறது. இன்றைய சந்திப்பில், பெருங்கடல் மேலாண்மை, பருவநிலை குறித்த திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பன போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. எரிசக்தி விஷயத்தில் இரு தரப்பும் இணைந்து இரு கூட்டுப் பணிக்குழுவை உருவாக்கவும் ஒப்புக்கொண்டோம்’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு நார்டிக் நாடுகள் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்தப் போர் வெறுமனே ஐரோப்பாவுக்கு மட்டுமே கவலையளிக்கக்கூடியது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

‘அதேசமயம், இவ்விஷயத்தில் நார்டிக் நாடுகளும் இந்தியாவும் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளையும் கோணங்களையும் கொண்டிருக்கின்றன. எங்கள் கருத்தை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தோம். அதை அவர் கவனமாகக் கேட்டுக்கொண்டார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு நாங்கள் ஏன் கடுமையாக எதிர்வினையாற்றுகிறோம் என்பதை அவர் புரிந்துகொண்டார்’ என்றும் அந்த அறிக்கையில் நார்வே அதிபர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.