பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் பரபரப்பு... இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகளில் சிறையிலிருக்கும் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சைகள் முன்னிலை வகிப்பதால், நவாஸ் ஷெரீப் கட்சியினர் கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவினை அடுத்து, வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கின. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான ’பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ்’ கட்சி பெரும் வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டத் தகவல்கள் எந்த எதிர்பார்ப்பினை பொய்க்கச் செய்துள்ளன.

வாக்குகள் எண்ணும் பணி
வாக்குகள் எண்ணும் பணி

பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே தேர்தலில் போட்டியிட விரும்பிய அவரது 2 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்தவில்லை என அவரது கட்சிக்கு பொதுத்தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. முன்னதாக அக்கட்சியின் சின்னமான ’கிரிக்கெட் பேட்’டும் தடை செய்யப்பட்டது.

ஆனபோதும் சளைக்காத இம்ரான் கான் கட்சியினர் அனைத்து தொகுதிகளிலும் சுயேட்சைகளாக களமிறங்கினர். வாக்கு எண்ணிக்கையின் போக்கில் பெரும்பாலான தொகுதிகளில் அவர்களே முன்னிலை வகிப்பதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன. எனினும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் இன்னமும் வெளியிடவில்லை. சட்ட ஒழுங்கின் பெயரில் அங்கே இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதில் கமுக்கம் நீடிப்பது இம்ரான் கான் கட்சியினரை ஐயத்தில் ஆழ்த்தியுள்ளது.

இம்ரான் கான் Vs நவாஸ் ஷெரிஃப்
இம்ரான் கான் Vs நவாஸ் ஷெரிஃப்

மொத்தமுள்ள 266 தொகுதிகளில் சரிபாதியான 133 தொகுதிகளிலேனும் வெற்றி பெரும் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு பெறும். இது தவிர மகளிர் மற்றும் சிறுபான்மையினருக்கான 70 பிரதிநிதித்துவ தொகுதிகள் தனியாக இருக்கின்றன. வாக்குப்பதிவுக்கு முந்தைய வன்முறையில் ஒரு தொகுதியின் வேட்பாளார் கொல்லப்பட்டதில் 265 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

இம்ரான் கான் சிறையில் முடக்கப்பட்டதும், தேர்தலுக்கு முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளில் அடுக்கடுக்காக அவர் மீது கூடுதல் சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டதும் அவரது கட்சியினரை வேகம் கொள்ளச் செய்தன. அதுவே பொதுவெளியில் அனுதாப வாக்குகளை அதிகரிக்கச் செய்ததாகவும் தெரிகிறது. நவாஸ் ஷெரீப் ஆட்சியமைக்க ராணுவத்தின் மறைமுக ஆதரவு கரங்கள் நீண்டிருப்பதால், அக்கட்சியினர் மிதப்பாக இருந்தனர். ஆனால் இம்ரான் கட்சியினர், சுயேட்சையாக களமிறங்கியதில் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்திருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in