அனைத்துத் தரப்பினருக்கும் ஆப்கன் அரசில் இடமளிக்காவிட்டால் உள்நாட்டுப் போர் வெடிக்கும்: இம்ரான் கான் எச்சரிக்கை

ஆப்கன் விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என தாலிபான் பதிலடி
அனைத்துத் தரப்பினருக்கும் ஆப்கன் அரசில் இடமளிக்காவிட்டால்
உள்நாட்டுப் போர் வெடிக்கும்: இம்ரான் கான் எச்சரிக்கை
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

அனைத்து இன, பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை அமைக்க தாலிபான்கள் தவறினால், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் வெடிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்திருந்த நிலையில், இவ்விஷயத்தில் யாரும் தலையிட வேண்டியதில்லை என தாலிபான்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக பிபிசிக்கு நேற்று (செப்.21) அளித்த பேட்டியில், “அனைத்து இன, பிரதேச மக்களுக்கும் ஆட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்க தாலிபான்கள் தவறினால், பிரதிநிதித்துவம் பெறாதவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போர் செய்வார்கள். அதனால் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் குழப்பமும் நிலையற்ற ஆட்சியும் ஏற்படும். நாடு முழுவதும் ஒரே ஆட்சியின் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், அது பயங்கரவாதிகளுக்குத்தான் சாதகமாக அமையும். அகதிகளாகும் மக்கள் அதிக எண்ணிக்கையில் பாகிஸ்தானுக்குள் நுழைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் இம்ரான் கான்.

இம்ரான் கானின் கருத்துக்குப் பதிலளித்திருக்கும் முகம்மது மொபீன் எனும் தாலிபான் தலைவர், “ஆப்கானிஸ்தான் அரசில் யார் இடம் பெற வேண்டும் என்பதை மற்றவர்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை, அந்த உரிமையை நாங்கள் யாருக்கும் கொடுத்துவிடவில்லை” என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “பாகிஸ்தானைப் போலவே நாங்களும் சுதந்திர நாடுதான், எங்களுடைய ஆட்சியமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம். இப்போது நாங்கள் அமைத்துள்ள அரசாங்கமே அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தரும் அரசுதான்” என்று ஏரியானா டி.வி-க்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் மொபீன்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும், சிறுபான்மையினர் நன்றாக நடத்தப்பட வேண்டும், பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்துப் பதில் அளித்த தாலிபான் துணை செய்தி அமைச்சர் சபியுல்லா முஜாஹித், “எங்களை அங்கீகரிக்காமல் பேசினால் அது ஒருதலைபட்சமான அணுகுமுறையாகும். நாங்கள் பொறுப்பானவர்கள் என்று சர்வதேச சமூகம் முதலில் அங்கீகரிக்கட்டும். அதன் பிறகு இவற்றைப் பற்றிப் பேசட்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் ஆயிரம் கோடி டாலர்கள் நிதி வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் வங்கியில் முடக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையை வெளிநாடுகள் முதலில் விடுவித்தால் ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளைத் திறக்க முடியும் என்று அரசுப் பொறுப்பேற்றிருக்கும் தாலிபான்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் கடும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கோதுமை உள்ளிட்டவற்றை வாங்கி மக்களுக்கு விநியோகிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள 14 தேசிய இனங்கள் இருக்கும் நிலையில் பஷ்தூன்களே புதிய அரசில் பிரதான இடம் பிடித்திருக்கின்றனர். ஒரு பெண்கூட அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. இந்தக் காரணங்களை முன்வைத்து தாலிபான் அரசை அங்கீகரிக்க பெரும்பாலான நாடுகள் தயக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.