அதிபர் பஞ்சாயத்து; அசராத இம்ரான் கான்: பாகிஸ்தானில் அடுத்தது என்ன?

இம்ரானுக்கு ஆதரவாக நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்
இம்ரானுக்கு ஆதரவாக நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்

துப்பாக்கி குண்டடிப்பட்டு சிகிச்சை பெறும் நிலையிலும், தடைபட்ட பேரணியை மீண்டும் தொடங்குவதாக அறிவித்திருக்கும் இம்ரான் கானால் பாகிஸ்தானில் மீண்டும் பதட்டம் எழுந்துள்ளது. இம்ரானை சமாதானப்படுத்தும் பாக். அதிபரின் முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், நடப்பு பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது ஆட்சிக்கு எதிரான மெகா பேரணியை நவ.3 அன்று தொடங்கினார். பேரணியில் அணிவகுத்த இம்ரான் மீதான துப்பாக்கி தாக்குதலால் பேரணி ஒத்திவைக்கப்பட்டது. காலில் குண்டு பாய்ந்ததில் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் இம்ரான் கானின் கோபம் ,பிரதமர் ஷபாஸ் ஷெரீஃபைவிட ராணுவம் மற்றும் ’ஐஎஸ்ஐ’ உளவு அமைப்பு மீது பாய்ந்துள்ளது. ஆட்சியில் இருந்தபோதே பாகிஸ்தான் ராணுவத்துடனான உரசல்கள் நீடித்த நிலையில் தற்போது தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டதில் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ நேரிடையாக இருப்பதாக இம்ரான் குற்றம்சாட்டுகிறார். இது தவிர அதிபர் ஷபாஸ் ஷெரீஃப் உடனான இம்ரானின் பிரச்சினைகளும் அப்படியே நீடிக்கின்றன.

மருத்துவமனையில் இம்ரான் கான்
மருத்துவமனையில் இம்ரான் கான்

பாகிஸ்தான் தலைவிதியை தீர்மானிக்கும் பெருந்தலைகளுக்கு மத்தியிலான இந்த பிரச்சினையை பேசி தீர்ப்போம் என அதிபர் ஆரிஃப் ஆல்வி முன்வந்திருக்கிறார். துப்பாக்கி தாக்குதலில் உயிர் பிழைத்திருக்கும் இம்ரான் கானுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் அனுதாப அலை எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு வெளியேயும் இதர இஸ்லாமிய நாடுகளும், அதிகாரமிக்க அமைப்புகளும் இம்ரானுக்கு ஆதரவாக வரிந்துள்ளன. இந்த சூழலில் இம்ரானின் உக்கிரத்தை தணிப்பதே நல்லது என பாகிஸ்தானின் அதிகார பீடங்கள் கருதுகின்றன.

அரசுக்கும் இம்ரானுக்கும் இடையே நீடிக்கும் முக்கிய பிரச்சினைகளில் பஞ்சாயத்து செய்ய அதிபர் ஆரிஃப் முன்வந்தும் அதனை இம்ரான் நிராகரித்துள்ளார். பாகிஸ்தானில் மட்டுமன்றி சர்வதேச அளவில் தனது ஆதரவாக சூழல் மாறியிருப்பதாக கருதும் இம்ரான் அவற்றை பயன்படுத்திக்கொள்ளவும் துடிக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன்னை சந்தித்து அதிபர் ஆரிஃப் விடுத்த இந்த யோசனையை இம்ரான் நிராகரித்திருக்கிறார்.

ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைமையை நேரடியாக குற்றம்சாட்டும் இம்ரான், தன் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு எதிரான காவல்துறை புகாரில் ஐஎஸ்ஐ அமைப்பையும் சேர்த்திருக்கிறார். திரைக்கு பின்னிருந்தே இயங்கிப் பழகிய ஐஎஸ்ஐ அமைப்பை சந்திக்கு இழுப்பது தேசத்துக்கு நல்லதல்ல என்பதே ராணுவம் மற்றும் அதிபர் ஆரிஃபின் அவா. ஆனால் தனது முடிவில் உடும்பாக இருக்கும் இம்ரான், நின்றுபோன பேரணிக்கும் உயிரூட்டுகிறார்.

அதன்படி இம்ரான் கான் குண்டடிபட்ட இடத்திலிருந்து நாளை(நவ.8) மீண்டும் தொடங்கும் பேரணி, 2 வாரங்களில் தலைநகர் இஸ்லமாபாத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேரணி நெடுக கிடைக்கும் பொதுமக்கள் அனுதாபம் மற்றும் ஆதரவை அறுவடை செய்ய இம்ரான் துடிக்கிறார். ஆனால் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தொண்டர்களால் நேரக்கூடிய சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் இம்ரான் உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து குறித்து பாகிஸ்தான் அரசு கவலை கொண்டுள்ளது.

இம்ரானின் மீட்சியும் எழுச்சியும் மற்றுமொரு முறை பாகிஸ்தானில் அசாதாரண சூழலுக்கு அடித்தளமிட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in