எரிபொருள் விலையைக் குறைத்த இந்தியாவுக்கு ஜே! - இம்ரான் கான் புகழாரம்

எரிபொருள் விலையைக் குறைத்த இந்தியாவுக்கு ஜே! - இம்ரான் கான் புகழாரம்

அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணியாமல், தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், எரிபொருள் விலையைக் குறைத்திருப்பதாகவும் இந்தியாவைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கூடவே, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி தலைமையிலான அரசு தலையில்லாத கோழியைப் போல தாறுமாறாக ஓடுவதாகவும் அவர் விமர்சித்திருக்கிறார்.

பெட்ரோல் மீதான கலால் வரியில் 8 ரூபாய், டீசல் மீதான கலால் வரியில் 6 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் இம்ரான் கான், ‘எங்களுடைய அரசுக்கு பாகிஸ்தானின் நலனே பிரதானமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக உள்ளூர் மிர் ஜாஃபர்களும் மிர் சாதிக்குகளும் வெளிநாட்டு அழுத்தத்துக்கு அடிபணிந்து ஆட்சி மாற்றம் ஏற்படச் செய்தனர். பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில், இப்போது தலையில்லாக் கோழி போல ஓடிக்கொண்டிருக்கிறார்கள்’ என அதில் கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘குவாட் அமைப்பில் அங்கம் வகித்தாலும், அமெரிக்காவின் அழுத்தத்தைச் சமாளித்து ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து மக்களுக்கு நிம்மதியளித்திருக்கிறது இந்தியா. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் துணையுடன் இதை சாதிக்கவே எங்கள் அரசு செயல்பட்டுவந்தது’ என்றும் தனது ட்வீட்டில் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in