‘ஜி20 மாநாட்டுக்கு வந்தால், ரஷ்ய அதிபர் புதின் கைதாவாரா?’ -பிரேசில் அதிபர் சுவாரசிய பதில்!

மோடி உடன் புதின்
மோடி உடன் புதின்

அடுத்தாண்டு பிரேசிலில் கூட இருக்கும், ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் வருகை தந்தால் அவர் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து, பிரேசில் அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரேசில் அடுத்த ஆண்டு ஜி20 கூட்டத்தை நடத்த உள்ளது. ஜி20 கூட்டமைப்பில் ரஷ்யா முக்கியமான உறுப்பு தேசம் என்பதால், அடுத்த ஆண்டாவது அதற்கான உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.

இதன் பின்னணியில் சர்வதேச நீதிமன்றத்தால் கைது செய்யப்படும் வாய்ப்பை தவிர்ப்பதற்காகவே ஜி20 மாநாட்டை புதின் புறக்கணித்தார் என்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக, போர்க்குற்ற நடவடிக்கையின் கீழ் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மார்ச் மாதம் கைது வாரண்ட் பிறப்பித்தது.

ஆனால் ரஷ்ய படைகள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது உக்ரேனிய குழந்தைகளை கடத்தியதாகவோ முன்வைக்கப்படும் புகார்களை ரஷ்யா மறுத்துள்ளது. இதன் மத்தியில் கைது அச்சம் காரணமாக ஜி20 மாநாட்டை புதின் அடுத்தாண்டும் தவிர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோடி உடன் லூயிஸ் இனாசியோ
மோடி உடன் லூயிஸ் இனாசியோ

ஜி20 மட்டுமன்றி புதின் பல்வேறு சர்வதேசக் கூட்டங்களையும் இதற்கு முன்னதாக தவிர்த்திருக்கிறார். டெல்லியில் நடந்து முடிந்திருக்கும் இந்த வருடத்தின் ஜி20 கூட்டத்துக்கு தனக்கு பதில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை அனுப்பி வைத்தார்.

இதனிடையே, ’ரஷ்ய தலைவர் விளாடிமிர் புதின் அடுத்தாண்டு பிரேசில் தேசத்தின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 கூட்டத்தில் பங்கேற்றால் கைது செய்யப்படுவாரா’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் பதில் அளித்துள்ளார்.

“அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டுக்கு புதின் அழைக்கப்படுவார். புதின் பிரேசிலுக்கு வருவதில் பிரச்சினை இருக்காது. அப்போது நான் பிரேசில் அதிபராக இருப்பின், புதின் பிரேசிலுக்கு வந்தால், அவர் கைது செய்யப்பட மாட்டார் என உறுதி கூறுகிறேன்” என்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ பதில் தந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in