என்னால் இலங்கையைக் காப்பாற்ற முடியாது: கோத்தபய ராஜபக்ச திடீர் கைவிரிப்பு!

என்னால்  இலங்கையைக் காப்பாற்ற முடியாது: கோத்தபய ராஜபக்ச திடீர் கைவிரிப்பு!

என்னால் மட்டும் இலங்கையைக் காப்பாற்ற முடியாது என்று அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து அமைச்சர்களுடன் அதிபர் கோத்தபய ராஜபக்ச கலந்து கொண்ட சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அப்போது "புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்" என்று கோத்தபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுடன் நடந்த கூட்டத்தில் கோத்தபய பேசுகையில்,” பொருளாதார நெருக்கடியில் இருந்து என்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் உண்டு. அதனால் தான் அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம் ஒப்படைத்துள்ளேன். அதேவேளை, திறமைமிக்கவர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி வருகிறேன்.

அமைச்சரவை நியமனம் முழுமை பெற்றவுடன் அதிபர் பதவியிலிருந்து நான் விலகுவேன் என்று சில ஊடகச் செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன். அதிபர் - பிரதமர் – அமைச்சரவை இணந்து ஓரணியில் செயற்பட்டால்தான் நாட்டின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண முடியும். இந்தப் புதிய அரசு சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று கோத்தபய ராஜபக்ச பேசியதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக இலங்கையில் 50-வது நாளாக இன்று போராட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in