ட்விட்டரில் வெறுப்புக் கருத்துகளைக் கட்டுப்படுத்துவாரா எலான் மஸ்க்?

ட்விட்டரில் வெறுப்புக் கருத்துகளைக் கட்டுப்படுத்துவாரா எலான் மஸ்க்?

பேச்சு சுதந்திரத்துக்கு ஆதரவானவராகத் தன்னைச் சித்தரித்துக்கொள்ளும் தொழிலதிபர் எலான் மஸ்க், தற்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிலையில், ட்விட்டரில் வெறுப்புக் கருத்துகள் பரவுவதை அவர் கட்டுப்படுத்துவாரா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஸ்பேஸ்-எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், முழுமையான பேச்சு சுதந்திரத்துக்கு ஆதரவானவர் எனத் தன்னை முன்னிறுத்திக்கொள்பவர். ட்விட்டர் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளை விமர்சித்துவந்தவர். பேச்சு சுதந்திரம் விஷயத்தில் ட்விட்டர் சமூகவலைதளம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திவந்தவர்.

இந்தச் சூழலில், தொடர் முயற்சிகளின் விளைவாக 44 பில்லியன் டாலர் தொகைக்கு ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கியிருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் நேற்று இறுதிசெய்யப்பட்டது. இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், பேச்சு சுதந்திரம்தான் ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்நிலையில், பேச்சு சுதந்திரத்தைக் காக்கவும், ட்விட்டரில் வெறுப்புக் கருத்துகள் பரவுவதைத் தடுக்கவும் எலான் மஸ்க் என்ன நடவடிக்கை எடுப்பாரா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இதுதொடர்பாக, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞரும், டிஜிட்டல் தளங்களில் கருத்து சுதந்திரத்தின் நிலை குறித்த ஆய்வாளருமான டெபோரா ப்ரவுன், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், ‘ட்விட்டர் நிறுவனம் யாரால் நடத்தப்பட்டாலும் சரி, அந்தத் தளத்தைச் சார்ந்து உலகெங்கும் இயங்கிவரும் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த நிறுவனம் மனித உரிமை கடமைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம். அதன் கொள்கைகள், அல்காரிதம்கள், அம்சங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் சிறிய மற்றும் பெரிய மாற்றங்கள் கடுமையான வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட விளைவுகளுக்கு வித்திடக்கூடியவை’ என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அமெரிக்க சிவில் உரிமை சங்கம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் இவ்விஷயத்தில் எலான் மஸ்க்குக்கு இருக்கும் பொறுப்பைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. பேச்சு சுதந்திரம் எனும் பெயரில் வெறுப்புக் கருத்துகளும், வன்முறைக்கு வித்திடும் கருத்துகளும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ட்விட்டரில் பதிவிடப்பட்டால் அது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இந்த எதிர்பார்ப்புகளை எலான் மஸ்க் பூர்த்திசெய்வாரா எனப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.