ரூபிளின் மதிப்பை ரஷ்யா மீட்டெடுத்த ரகசியம் என்ன?

ரூபிளின் மதிப்பை ரஷ்யா மீட்டெடுத்த ரகசியம் என்ன?

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் செலாவணி மாற்று மதிப்பை வெகுவாக இழந்த ரஷ்யச் செலாவணி ரூபிள், இப்போது மீண்டும் மதிப்பு கூடி வருகிறது. அது எப்படி என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு முன்னால் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக 76 ரூபிள் மாற்றாக இருந்தது. போருக்குப் பின்னர், மார்ச் 7-ல் ஒரு டாலருக்கு 137 ரூபிள்கள் என்ற அளவுக்கு அதன் மாற்று மதிப்பு வெகுவாகச் சரிந்தது. இப்போது ஏப்ரல் 1-ல் 82 ரூபிள்கள் என்ற அளவுக்கு சரிந்த அதன் மதிப்பு வெகுவாக மீண்டிருக்கிறது.

எப்படி சாத்தியமானது?

ஒவ்வொரு 5,000 ரூபிளுக்கும் ஒரு கிராம் அசல் தங்கத்தை இணைப்பதாக ரஷ்யாவின் மத்திய வங்கி அறிவித்தது. ரஷ்ய மத்திய வங்கியிடமும் அரசிடமும் கையிருப்பில் அபரிமிதமாகத் தங்கம் உள்ளது. எனவே உலக நிதிச் சந்தைகள் இந்த அறிவிப்பினால் ரூபிளை வாங்குவதால் இழப்பு நேராது என்ற நிச்சயமான முடிவுக்கு வந்துவிட்டன. ரஷ்ய மத்திய வங்கி மட்டுமல்லாமல் பிற வங்கிகளும் தங்கத்தைக் கையிருப்பில் வைத்துள்ளன. கோடிக்கணக்கான தனி நபர்களும் தங்கத்தை வாங்கி வைத்துள்ளனர். அவர்கள் தங்களுடைய தங்கத்தை ரஷ்ய அரசுக்கே விற்று ரூபிளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

இதன் காரணமாகச் செலாவணிச் சந்தையில் மட்டுமல்ல ரஷ்யாவிலும் அதன் சார்பு நாடுகளிலும்கூட ரூபிளின் மாற்று மதிப்பு கூடிவிட்டது. இதனால் ரஷ்ய வங்கிகளின் வாசலில் பணம் எடுப்பதற்காக நிற்கும் கூட்டங்கள் குறைந்துவிட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏடிஎம்-களை நாடுவதும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயுவையும் கச்சா பெட்ரோலிய எண்ணெயையும் வாங்குகிறவர்கள் அதற்கான தொகையை ரூபிளாகத் தர வேண்டும் என்று அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்திலும் அவர் அவர் வெளிநாட்டுக் கொள்முதலாளர்களுடன் ஏற்கெனவே ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார். உலகின் எந்த நாணயத்துக்கும் தங்கக் கையிருப்பு உத்தரவாதமாகத் தரப்பட்டால், அதன் மதிப்பு நிலைப்படும். ரூபிள் சமீபத்திய உதாரணம்.

தாக்குப்பிடிக்கவைத்த தங்கம்

ரஷ்யாவிடம் இப்போது 2298.53 டன்கள் தங்கம் கையிருப்பில் உள்ளது. உலக அளவில் இது ஐந்தாவது இடம். அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கக் கையிருப்பில் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. உண்மையான தங்கம் ரஷ்யாவின் மத்திய வங்கிக்கு வருவதற்கு சில நாட்களாகும் என்றாலும் அரசின் அறிவிப்பும், அது நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கையும் ரூபிளின் மதிப்பை மீட்டுக் கொடுத்திருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடுத்து என்ன செய்யும் என்று பார்க்க வேண்டும்.

பொருளாதாரத் தடையால் யாருக்குப் பாதிப்பு?

ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயு, கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா அறிவித்தாலும் ஐரோப்பிய நாடுகள் அதிலும் குறிப்பாக சிறிய நாடுகள் இன்றளவும் ரஷ்யாவிடமிருந்துதான் இவற்றைப் பெறுகின்றன. அமெரிக்காவாலும் குறுகிய காலத்தில் அதிகம் தயாரித்து கச்சா எண்ணெய்யை வழங்குவது சாத்தியமில்லை. பெருந்தொற்றுக்குப் பிறகு சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்ந்துவந்தது. பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள், உலகின் தேவைக்கேற்ப உற்பத்தியைக் கூட்ட முடியாது என்று கூறி வந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தங்களுடைய பொருளாதாரமும் நசிந்துவிட்டதால் அதை மீட்கும் அளவுக்கு விலை கிடைப்பதற்காக உற்பத்தியைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உயர்த்துவோம் என்று கூறிவிட்டன.

இந்த நிலையில் மிகப் பெரிய தயாரிப்பாளரும் விற்பனையாளருமான ரஷ்யா மீது அமெரிக்கா எடுத்த தடை நடவடிக்கை ரஷ்யாவை பாதிப்பதைவிட, ஏராளமான ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்க ஆதரவு நாடுகளையும்தான் பாதித்திருக்கின்றன. அனைத்து நாடுகளும் எண்ணெய் விலை காரணமாக நிதி நெருக்கடியில் ஆழ்ந்து வருகின்றன.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் சரியாக திட்டமிடப்படாமலும், மாற்று திட்டங்கள் இல்லாமலும் எடுக்கப்பட்டதே இந்த நிலைமைக்குக் காரணம்.

Related Stories

No stories found.