தீர்வுக்குக் காத்திருக்கும் தீவு தேசம்!

என்னவாகும் இலங்கையின் எதிர்காலம்?
தீர்வுக்குக் காத்திருக்கும் தீவு தேசம்!

ஒரு காலத்தில் நவீன துட்டகைமுனுவாக சிங்களப் பேரினவாத ஆதரவாளர்களால் போற்றப்பட்ட கோத்தபய ராஜபக்ச, இப்போது அதே மக்களின் எதிர்ப்பைச் சமளிக்க முடியாமல் நாடு நாடாக அலைந்துகொண்டிருக்கிறார். பெரும் கொந்தளிப்புக்குப் பின்னர் உண்மையான ஆட்சி மாற்றத்தை நோக்கி இலங்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. இலங்கையின் புதிய அதிபராக, பிரதமராகப் பொறுப்பேற்கவிருப்பவர்களுக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. ஆம், இலங்கையரின் இன்னல்கள் தீர இன்னும் ஏகப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டியிருக்கிறது. இலங்கையில் இதுவரை நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன?

வாழ்ந்துகெட்ட தேசம்

இந்தியாவின் பிரதான மாநிலங்களை ஒப்பிட இலங்கை ஒரு சிறிய பிரதேசம்தான். அதேசமயம், சுகாதாரம், கல்வி போன்ற அம்சங்களில் ஏறத்தாழ ஐரோப்பிய நாடுகளுக்கு நிகரான இடத்தை இலங்கை அடைந்திருந்தது. தனிநபர் வருமானம் இந்தியாவை ஒப்பிட இரண்டு மடங்கு அதிகம். அதேசமயம், 1965 முதல் பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து 16 முறை நிதியுதவி பெற்றிருக்கிறது இலங்கை. அதை வைத்துத்தான் அந்நியச் செலாவணிக் கையிருப்பு கரைவதைச் சமாளித்துவந்திருக்கிறது. இலங்கை உள்நாட்டுப் போர், நிச்சயமற்ற அரசியல் ஸ்திரத்தன்மை எனப் பல்வேறு காரணங்கள் அதற்கு வழிவகுத்தன. எதேச்சதிகார ஆட்சி, எதிர்காலம் குறித்த அக்கறையின்றி போடப்பட்ட உத்தரவுகள், எல்லை மீறிய கடன்கள் என எதிர்மறையான பல்வேறு காரணிகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்ததும், இது ஒட்டுமொத்தமாகப் பெரு வெடிப்பாக மாறியது.

இன்றைய தேதியில் இலங்கையின் 90 சதவீத மக்கள் குறைந்தபட்சம் ஒரு வேளை உணவையாவது தியாகம் செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப மூன்று நாட்களுக்கு நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டது, மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டது என அந்நாடு அனுபவித்த / அனுவிக்கும் சிரமங்கள் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை. போர்க்காலங்களில் ஒரு நாடு சந்திக்கும் இன்னல்களுக்கு இணையான துன்பங்களை இலங்கை இன்றைக்குச் சந்தித்துவருகிறது.

முடித்துவைத்த கோத்தபய

2009 இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையின் பாதுகாப்புத் துறையின் செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்ச ‘தி டெர்மினேட்டர்’ என சிங்களப் பேரினவாத ஆதரவாளர்களால் பெருமிதத்துடன் அழைக்கப்பட்டார். அவரது கொடுங்கோன்மையின் முகம் ஈழத்தமிழர்கள் நன்கு அறிந்ததுதான் என்றாலும், சிங்கள மக்கள் தாமதமாகவே அவரது உண்மை முகத்தைப் புரிந்துகொண்டார்கள். அவரது தவறான ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிதிலமடைந்துகொண்டிருக்கிறது இலங்கை.

இதன் உச்சமாகத்தான் ஜூலை 9-ல் பெரும் திரளாகத் திரண்டுவந்து அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டனர். அதை முன்கூட்டியே உணர்ந்திருந்த கோத்தபய, எப்படியோ அங்கிருந்து தப்பினார். கொழும்பு அருகில் உள்ள ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையில் உள்ள அகுரேகோடா ராணுவக் கட்டிடத்தில் அவர் இறுதியாகத் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. அதற்கு முன்பு வேறு சில இடங்களில் அவர் பதுங்கியிருந்தார். ஜூலை 13-ல் அகுரேகோடாவிலிருந்து பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்துக்குத் தனது மனைவி அயோமா மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் வந்த கோத்தபய, ஏ.என் - 32 எனும் விமானப் படை விமானம் மூலம் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார். அதிகாலை 1 மணிக்குக் கிளம்பியவர்கள் அதிகாலை 3 மணிக்கெல்லாம் மாலத்தீவை அடைந்துவிட்டார்கள். எனினும், அங்கு அவர்கள் நிரந்தரமாகத் தங்க மாட்டார்கள் என மாலத்தீவு அரசு கூறிவிட்டது.

பின்னர் சவுதி அரேபிய விமானம் மூலம் பாதுகாப்பாக சிங்கப்பூரைச் சென்றடைந்தார் கோத்தபய. அவர் தனிப்பட்ட பயணமாக வந்திருப்பதாகவும் அவருக்கு அடைக்கலம் வழங்கவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெளிவுபடுத்திவிட்டது. கோத்தபய இறுதியாக எங்கு சென்று தனது இறுதிக்காலத்தைக் கழிக்கப்போகிறார் என இன்னமும் உறுதியாகவில்லை.

ராஜினாமாவும் கொண்டாட்டமும்

மிகவும் சாதுரியமாக ஜூலை 15-ல் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்தார் கோத்தபய. அவர் தப்பிச் சென்றுவிட்டதில் சற்றே ஏமாற்றம் இருந்தாலும் அவரது ராஜினாமா, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. கொழும்பின் வீதிகளெங்கும் வெடி வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர் மக்கள்.

கோத்தபய மாலத்தீவுக்கு வருவதற்கு அந்நாட்டு அதிபரிடம் ஒப்புதல் வாங்கிய மாலத்தீவு முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத், “கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்துவிட்டார். இனி இலங்கை முன்னேற்றம் காணும் என நம்புகிறேன். அவர் இலங்கையிலேயே இருந்திருந்தால், உயிருக்கு அஞ்சி, அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருக்க மாட்டார்” என்று ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின்படி அதிபர் பதவி காலியானால், ஒரு மாதத்துக்குள் புதிய அதிபர் நியமிக்கப்பட வேண்டும். இந்தச் சூழலில் 7 நாட்களில் புதிய அதிபரை நியமிப்பதாக அபேவர்தன உறுதியளித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஜூலை 20-ல் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அவர் கூறியிருக்கும் நிலையில், அந்தப் பொறுப்பு யாருக்குக் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

புதிய அதிபர் யார்?

அதிபர் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய அதிபரைத் தேர்வுசெய்யவிருக்கிறார்கள். இலங்கையில் 1978-க்குப் பின்னர், மக்கள் நேரடியாக வாக்களிக்காமல் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய முறையில் வாக்களித்து புதிய அதிபரைத் தேர்வுசெய்யவிருப்பது கவனிக்கத்தக்கது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரைத் தேர்வுசெய்யப் போகிறார்கள் என்பதை இப்போதே அறுதியிட்டுச் சொல்ல முடியாது. புதிய அதிபராகப் பொறுப்பேற்பவர், புதிய பிரதமரை நியமிக்க வேண்டியிருக்கும். பிரதமர் நியமனத்தை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

நாடாளுமன்றத்தில் இதற்கான பணிகள் சனிக்கிழமை (ஜூலை 16) முதல் தொடங்கியிருக்கின்றன. 19-ம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும். தற்போதைய பிரதமர் - அதிபர் ரணில், ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) தலைவர் சஜித் பிரேமதாசா, ராணுவத்தின் முன்னாள் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெருமா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ராஜபக்ச குடும்பத்தின் நீண்ட கால விசுவாசியாக அறியப்படும் டளஸ் அலஹப்பெருமா இப்போது ஆளுங்கட்சியிலேயே புதிய அணியை உருவாக்கியிருக்கிறார். புதிய ஆட்சி அமைய வேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறார். இதற்கிடையே, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை மீண்டும் அதிபராக்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் தயாராகிவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததும் அவருக்குப் பதிலாக ரணில் விக்கிரமசிங்கேயைப் பிரதமராகத் தேர்வுசெய்தது கோத்தபய தான். கூடவே, கோத்தபயவின் இலங்கை பொதுசன முன்னணி கட்சிக்கு (எஸ்எல்பிபி) மிகவும் வேண்டப்பட்டவராக ரணில் மாறிவிட்டார். எனவே, கோத்தபயவைப் போலவே ரணிலையும் மக்கள் வெறுக்கவே செய்கிறார்கள். போராட்டக்காரர்களை பாசிஸ்டுகள் என்று ரணில் அழைத்ததும், ராணுவத்தைப் பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க அவர் உத்தரவிட்டதும் அவர் மீதான அதிருப்தியை அதிகரித்துவிட்டன.

உண்மையில், மக்களின் போராட்டம் தொடர்ந்தால் எரிபொருளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டைப் போலவே மின்சாரம், குடிநீர், உணவுப் பொருள் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று ரணில் நியாயமாகவே எச்சரித்திருக்கிறார். ஆனால், மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால் அவர்கள் மீண்டும் கொந்தளிப்படைவதைத் தடுக்க முடியாது.

அதுமட்டுமல்ல, ஏறத்தாழ எல்லா அரசியல் தலைவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். சாமானிய மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய ‘மக்கள் கவுன்சில்’தான் புதிய அரசாக அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் இலங்கை மக்கள். இவ்வளவு பிரச்சினைகளுக்கும் முக்கியக் காரணமாக இலங்கையர்களால் குற்றம்சாட்டப்படும் கோத்தபய, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பின்னரும் அவரது இலங்கை பொதுசன முன்னணி கட்சி அவரைப் புகழ்ந்துரைக்கத் தவறவில்லை. 30 ஆண்டுகால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்றும், அமைதியை ஏற்படுத்தியவர் என்றும் ஜூலை 15-ல் அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இலங்கை மக்களை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காத்திருக்கும் சவால்கள்

புதிய அதிபர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. ஏற்கெனவே பன்னாட்டு நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள், இலங்கையின் உச்சகட்ட அரசியல் குழப்பத்தால் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டன. மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் தாக்குதலில் நிலைகுலைந்திருக்கும் உக்ரைன் மீதே அதிக கவனம் செலுத்துகின்றன.

இலங்கையின் தொழில்கள், வணிகம் என எல்லாமே முடங்கிக் கிடக்கிறது. பணவீக்கம் 70 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதியைத் திரட்டும் கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.

இத்தனைப் பிரச்சினைகளுக்கு நடுவே, இலங்கையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டித் தொடர் 1-1 என சமன் செய்யப்பட்டது. அடுத்து பாகிஸ்தான் அணியும் இலங்கைக்குச் சென்றிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. காரணம், கிரிக்கெட்டை வைத்தாவது ஓரளவு வருவாய் கிடைக்கும் எனும் நம்பிக்கைதான். எதிர்பார்த்தபடியே, ஆஸ்திரேலிய அணியின் வரவால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு 2 மில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் வந்ததால் உள்ளூர் மக்களுக்குக் கொஞ்சம் வருமானமும் கிட்டியது. இப்படி கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது இலங்கை.

பின்வாங்கும் நாடுகள்

ஏற்கெனவே, இலங்கைக்கு நிதியுதவி வழங்கினால் அது தவறாகக் கையாளப்படும் எனும் அச்சம் இருப்பதால் அந்நாட்டுக்கு உதவ ஜப்பான் மறுத்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதை இலங்கைக்கான ஜப்பான் தூதர் மிஸுகோஷி ஹிடேகி வெளிப்படையாகவே தெரிவித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது சர்ச்சையானது. அதேசமயம், சீனாவைவிட குறைந்த வட்டியில் ஜப்பான் கடன் வழங்கும் என்பதால் அந்நாட்டிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது இலங்கை.

சீனாவிடமிருந்து மேலும் 4 பில்லியன் டாலர் நிதியுதவி கோரி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது இலங்கை. ‘ஒருகட்டத்தில்’ சீனா சம்மதிக்கும் என சீனாவுக்கான இலங்கைத் தூதர் பலிதா ஹோஹோனா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், ஒரு அண்டை தேசம் மற்றும் ஒத்துழைப்பு பங்காளி எனும் முறையில், இலங்கை மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளிலிருந்து அந்நாடு வெளிவரும் என்றும், அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் என்றும் சம்பிரதாயமாக சீன வெளியுறவுத் துறைச் செயலாளர் வாங் வென்பின் கூறியிருக்கிறார். இலங்கைக்கு உதவுவது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இந்தியாவுக்கும் சவால்

இந்தியாவைப் பொறுத்தவரை, நெருங்கிய வரலாற்று, பண்பாட்டுத் தொடர்புகள் கொண்ட அண்டை நாடான இலங்கைக்கு உதவியாக வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல கோத்தபய மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மக்களின் பக்கம் நிற்பதாகவும் உறுதியளித்திருக்கிறது. ஏற்கெனவே ஏறத்தாழ 4 பில்லியன் டாலர் நிதியுதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. கூடவே, உணவுப் பொருள், மருந்துகள், எரிபொருள் என அத்தியாவசிய உதவிகளையும் தாராளமாக வழங்கியிருக்கிறது. அவற்றையெல்லாம் தாண்டி இந்தியாவிடமிருந்து மேலும் நிதியுதவி கோரிவருகிறது இலங்கை.

இதற்கிடையே புவி அரசியல் புயலிலும் இலங்கை சிக்கக்கூடும் என அச்சம் எழுந்திருக்கிறது. குவாட் போன்ற அமைப்புகளுக்கு மாற்றாக குளோபல் செக்யூரிட்டி இனிஷியேட்டிவ் எனும் பெயரில் சீனா தொடங்கும் அமைப்பு முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதில் இலங்கையின் பங்கு அவசியம் எனக் கருதினால் அந்நாட்டுக்குக் கடனுதவி வழங்க சீனா முன்வரும். சுயநலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருக்கும் சீனா இதைச் செய்தால் இலங்கை அந்நாட்டின் கைக்குள் அடங்கிவிடும். அது பிராந்திய ரீதியாக இந்தியாவுக்குச் சவாலாக அமையும். இந்தியாவின் எச்சரிக்கைகளையும் மீறித்தான் சீனாவின் கடன் வலையில் மாட்டிக்கொண்டது இலங்கை. இப்போது அந்த வாய்ப்பை இந்தியா தவறவிடாது என்றே நம்பப்படுகிறது. பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in