
இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரின் போருக்கு ஆதரவளிக்கும் வகையில் ஈரான் நாட்டு ஆதரவு அமைப்பான ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் நிலைகளை குறிவைத்து காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதற்கு பதிலடியாக போரை அறிவித்துள்ள இஸ்ரேல், தொடர் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காஸா பகுதியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஹமாஸுக்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாக ஆதரவளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளும், வெளிப்படையாக அறிவிக்காமல், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில், ஏமன் நாட்டிலிருந்து செயல்படும் ஈரான் ஆதரவு படையான ஹவுதி அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சுமார் ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்து அந்த அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 3வது முறையாக ஹவுதி அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை உறுதி செய்யும் விதமாக செங்கடல் பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இனியும் தாக்குதல் தொடரும் என்ற ஹவுதி அமைப்பின் எச்சரிக்கையால் அரேபிய தீபகற்பம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!