‘எங்கு பார்த்தாலும் நீங்கள்தானா?’ - இந்தியப் பெண்கள் மீது நடந்த இனவெறித் தாக்குதல்

‘எங்கு பார்த்தாலும் நீங்கள்தானா?’ -  இந்தியப் பெண்கள் மீது நடந்த இனவெறித் தாக்குதல்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அவ்வப்போது இனவெறி ரீதியிலான வசவுகளை, தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்வதுண்டு. அமெரிக்காவின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு துணைபுரியும் சூழலில், இந்தியாவிலிருந்து வந்து நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகவும், அமெரிக்கர்களின் பணிவாய்ப்புகளைப் பறித்துக்கொள்வதாகவும் சில இனவெறியர்கள் கருதிக்கொள்கிறார்கள். சில சமயங்களில் அந்த இனவெறி வார்த்தைகளாகவும், வன்முறையாகவும் வெளிப்படுவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்திருக்கிறது.

டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் புதன்கிழமை (ஆக.24) இரவு ஒரு கார் பார்க்கிங் பகுதியில், இனவெறி கொண்ட பெண் ஒருவர் நான்கு இந்தியப் பெண்களைக் கடுமையான வசவு வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

“இந்தியர்களை வெறுக்கிறேன். நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த இந்தியர்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு வருகிறார்கள்” என்று அந்தப் பெண் பேசும் காணொலி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“நான் எங்கு சென்றாலும் இந்தியர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். இந்தியாவில் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருந்தால், இங்கு ஏன் வருகிறீர்கள்?” என்று தொடர்ந்து அப்பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய அப்பெண், ஒருகட்டத்தில் அவர்களைத் தாக்கவும் தொடங்கிவிட்டார். “இந்தியாவுக்குத் திரும்ப செல்லுங்கள்” என்றும் அப்பெண்களை அவர் மிரட்டியிருக்கிறார்.

இந்தக் காட்சிகள் அனைத்தையும் அப்பெண்கள் செல்போன்களில் படமெடுத்தனர். அந்தப் பெண்ணும் அப்பெண்களைத் தனது செல்போனில் படமெடுத்தபடியே திட்டி, தாக்கியிருக்கிறார். இந்த இனவெறித் தாக்குதலின் காணொலிக் காட்சியை, அமெரிக்கவாழ் இந்தியப் பெண்ணான ரீமா ரசூல் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

தாக்குதலில் ஈடுபட்ட பெண் அமெரிக்காவைச் சேர்ந்தவர் அல்ல என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். மெக்ஸிகோவைப் பூர்விகமாகக் கொண்டவர் அவர். எனினும், இந்தியர்கள் மீதான இனவெறியுடன் அவர் நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அது மட்டுமல்ல, அப்பெண் தன் கைப்பையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், இந்தியப் பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த விரும்பியதாகவும் ரீமா ரசூல் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் காணொலி வெளியானதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரது பெயர் எஸ்மெரால்டா உப்டான் எனத் தெரியவந்திருக்கிறது. தாக்குதல், உடலில் காயம் ஏற்படுத்துதல், பயங்கரவாத மிரட்டல் விடுவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in