
பாகிஸ்தானில் கராச்சி அருகே ஓரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா மந்திர் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கோயிலில் உள்ள சிலைகள் சேதமடைந்தன.
ஓரங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜே பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் காரணமாக கராச்சியில் வசிக்கும் இந்து சமூகத்தினரிடையே பீதியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய ஓரங்கி காவல்துறை அதிகாரி ஃபரூக் சஞ்சராணி, "ஐந்து முதல் ஆறு அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். கோயிலில் புகுந்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்து மக்களுக்கு சொந்தமான கோயில்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த அக்டோபரில் பாகிஸ்தான் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்ரி கோயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.