உயிரிழப்புகள் கவலையளிக்கின்றன: உக்ரைனுக்கு ஆறுதல் சொன்ன சீனா!

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், ரஷ்யாவின் நட்பு நாடான சீனா உக்ரைனின் இழப்புகளுக்காக வருத்தம் தெரிவித்திருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, நேற்று (மார்ச் 1) இரவு, உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைத்ரோ குலேபாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீன வெளியுறவுத் துறை, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதலில், பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் சீனாவுக்கு மிகுந்த கவலையளிப்பதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் வாங் யி கூறினார் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

எல்லா நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றே சீனா வலியுறுத்திவருகிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் உக்ரைனும் ரஷ்யாவும் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்றும், உக்ரைன் விவகாரத்தில் ஆக்கபூர்வமான சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் சீனா தெரிவித்திருக்கிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தவிர்த்துவிட்டன. ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி, வர்த்தகத் தொடர்பு என பல ஆண்டுகளாக நட்புறவைப் பேணிவரும் இந்தியா இந்தச் செயல் மூலம் தனது நிலைப்பாட்டை உணர்த்திவிட்டது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு சரியா, தவறா எனும் வாதங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

சீனாவைப் பொறுத்தவரை ரஷ்யாவைவிடவும் உக்ரைனுடன் தான் அதிக வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. உக்ரைனிலிருந்து பார்லி, சோளம் போன்றவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது சீனா. ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சீனாவின் வணிகத் தொடர்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. இப்படியான சூழலில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை நீட்டித்துக்கொண்டே செல்வது சீனாவுக்கும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. கூடவே, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் ஒன்றான சீனா, மற்றொரு நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் விரும்புகிறன.

இந்தச் சூழலில், உக்ரைனுக்குச் சீனா ஆறுதல் சொல்வது முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இவ்விஷயத்தில் ஆரம்பம் முதலே மிகுந்த கவனமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் சீனா, உக்ரைன் மீது ரஷ்யா ஊடுருவல் நிகழ்த்தியிருப்பதாக இதுவரை விமர்சிக்கவில்லை. உக்ரைன் தரப்பு மேற்கொண்ட முயற்சியின் விளைவாகத்தான் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு சீனா பேசியிருக்கிறது. ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுவரை உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியைத் தொடர்புகொண்டு பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் சிக்கியிருக்கும் சீனக் குடிமக்களில் ஏறத்தாழ 1,000 பேர் மால்டோவா, ஸ்லோவாகியா, ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளுக்குப் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் சீனா தெரிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in