இலங்கை அதிபர் மாளிகையில் ரகசியப் பாதை: இப்படித்தான் தப்பிச்சென்றாரா கோத்தபய?

இலங்கை அதிபர் மாளிகையில் ரகசியப் பாதை: இப்படித்தான் தப்பிச்சென்றாரா கோத்தபய?

கடும் பொருளாதார நெருக்கடியில் உழன்று ஒருகட்டத்தில் மக்கள் எழுச்சியின் உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் நேற்று அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்ச இப்போது எங்கு இருக்கிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், திரளான மக்கள் கூட்டத்துக்கு நடுவே அவர் எப்படித் தப்பிச் சென்றார் எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் மாளிகையில் உள்ள ரகசிய வழி மூலம் தப்பிச் சென்றதாகப் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மகிந்த ராஜபக்ச பதவி விலகி புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்ற பின்னரும் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்ததால், மக்கள் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. குறிப்பாக, எரிபொருள் இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். தலைநகர் கொழும்புவில் ஏற்கெனவே மக்கள் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மீண்டும் மக்கள் போராட்டம் உச்சமடையும் என்பதை உணர்ந்த கோத்தபய அரசு, வெள்ளிக்கிழமை இரவு காவல் துறை சார்பில் ஊரடங்கு பிறப்பித்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்த நிலையிலும் ஊரடங்கு கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. வீட்டைவிட்டு மக்கள் வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

சனிக்கிழமை, கொழும்புவிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்தும், பிற ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டு அதிபர் மாளிகையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். மிகச் சிலரே எரிபொருள் நிரப்பிக்கொண்டு சொந்த வாகனங்களில் சென்றனர். பலர் பேருந்துகள், ரயில்களில் கொழும்பு சென்றனர். புறநகர்ப் பகுதிகளில் வசித்த பலர் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் 20 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றனர். கிடைத்த வேன்களில் தொற்றிக்கொண்டு அதிபருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி முன்னேறினர்.

மதியம் போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்ட முயன்றதையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து, படுக்கைகளில் படுத்து சாமானிய மக்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து விளையாடிய காணொலிகள் பரவலாகப் பகிரப்பட்டன. அருகில் உள்ள தலைமைச்செயலகத்துக்குள்ளும் மக்கள் புகுந்தனர். பிரதமர் இல்லமான அலரி மாளிகையும் முற்றுகையிடப்பட்டது. அதிபரின் வீடும் முற்றுகையிடப்பட்டது.

அதிபர் தப்பியது எப்படி?

அதேசமயம், இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில் கோத்தபய எப்படித் தப்பிச் சென்றார் எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக வெள்ளிக்கிழமை இரவே அதிபர் மாளிகையிலிருந்து கோத்தபய வெளியேறியதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அவர் இலங்கையிலேயே ராணுவப் பாதுகாப்புடன் தங்கியிருப்பதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். எனினும், மக்கள் முற்றுகையிடுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்பு அவர் கடற்படையினரின் உதவியுடன் வெளியேறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரகசியப் பாதை

இந்நிலையில்தான், அதிபர் மாளிகையில் இருக்கும் ரகசிய வழி குறித்த தகவல்கள் ‘இந்தியா டுடே’ ஊடகத்தில் வெளியாகியிருக்கின்றன. அங்குள்ள ஓர் அறையில், ஆடைகள் வைக்கப்படும் அலமாரி போன்ற கதவின் பின்னால் ஒரு பாதாள அறைக்கான பாதை இருக்கிறது. அதிலிருந்து கீழே செல்ல அங்கு ஒரு லிஃப்ட் இருக்கிறது. எனினும், ரகசிய இரும்புக் கதவு அதை மூடியிருக்கிறது. மிகவும் வலிமை வாய்ந்த கட்டுமானமாக அது தெரிகிறது. எனினும், இதைப் பயன்படுத்தி பாதாள வழி மூலம் கோத்தபய தப்பித்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேசமயம், அப்படி ஒரு ரகசிய ஏற்பாடு இருப்பதை அங்கிருந்த சிறப்பு அதிரடிப் படையினரும் உறுதிசெய்ததாக ‘இந்தியா டுடே’ தெரிவித்திருக்கிறது.

நேற்று தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் கைமாறுவதை உறுதிசெய்யும் வகையில் ஜூலை 13-ம் தேதி கோத்தபய அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வார் என அறிவித்தார்.

கோத்தபய பதுங்கியிருக்கும் இடம் குறித்து இதுவரை உறுதியாக எதுவும் தெரியாவிட்டாலும், இயற்கை எரிவாயு விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு அவர் உத்தரவிட்டதாக இன்று மதியம் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in