துபாயை துவம்சம் செய்த கனமழை... மூழ்கிய மருத்துவமனைகள்; மிதக்கும் கார்கள்!

துபாயை துவம்சம் செய்த கனமழை... மூழ்கிய மருத்துவமனைகள்; மிதக்கும் கார்கள்!

கடும் வெயில் சுட்டெரிக்கும் துபாயில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மூழ்கிகிடக்கின்றன. மருத்துவமனைகள், பள்ளிகளில் நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்டவை மழை நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் நீடித்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கி மக்களை உறைய வைத்து வந்த நிலையில், திடீரென இன்று அதிகாலை முதலாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வீடுகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றை மழை நீரில் மிதக்கின்றன. இதனால் பெரும்பாலான பள்ளிகள் மதியத்துடன் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டன. அலுவலகங்களும் ஊழியர்களை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளன. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், பல மருத்துவமனைகளுக்குள் மழை நீர் புகுந்தது தான். மழை நீர் புகுந்ததால் பல மருத்துவமனைகள் தங்கள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. மழை நீரால் மின் கசிவு போன்ற அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்பதால் சில மருத்துவமனைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகள் வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

இப்போதே பல மருத்துவமனைகளில் முதல் தளங்கள் கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. இந்நிலையில், மேலும் மழை பெய்தால் மருத்துவமனைகளில் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. அதேபோல, மழை வெள்ளத்தால் பல சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஐக்கிய அரபு அமீரக மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், இன்னும் ஓரிரு தினங்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்பிக்க கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, அரசு, தனியார் அலுவலர்களும் வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். மேலும், அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனிடையே, மருத்துவமனைகள், வீடுகள், அலுவலகங்களில் இருந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in