தாலிபான்களிடமிருந்து தப்பி ஓடும் ஹஜாராக்கள்

தாலிபான்களிடமிருந்து தப்பி ஓடும் ஹஜாராக்கள்

ஆப்கனில் தொடரும் அவலங்கள்

இந்த நூற்றாண்டை, 'அகதிகளின் புலம்பெயர் அவல நூற்றாண்டு' என்றே இனி வரலாறு பதிவு செய்யும். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அந்நாட்டைவிட்டு தப்பியோட நினைப்பவர்கள், முயற்சி செய்பவர்கள், தப்பியோடிவிட்டவர்கள் எண்ணிக்கை பல்வேறு நிலைகளில் ஆயிரக்கணக்கிலேயே இருக்கிறது. அந்நாட்டின் இனக் குழுக்களிலேயே 3-வது பெரிய இனக்குழுவினர் ஹஜாராக்கள். ஆப்கானிஸ்தானின் மொத்த மக்கள்தொகையான 3 கோடியில் 20 சதவீதத்தினர் என்று கருதப்படும் ஹஜாராக்கள், கொலை மற்றும் சித்திரவதைகளுக்கு அஞ்சி தப்பியோடுகின்றனர். இவர்களுடைய நிலை மிகவும் பரிதாபகரமானது. இவர்களும் இஸ்லாமியர்கள், ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஆப்கானியர் மனங்களில் இவர்கள் அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், வேறு இனத்தவர்கள் என்ற சித்திரமே படிந்திருக்கிறது.

ஹஜாராக்கள் யார்?

‘ஹஜார்’ என்றால் ஆயிரம் என்று பொருள். 13-வது நூற்றாண்டில் மங்கோலியப் பிரதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்களுடன் புறப்பட்டு, எதிரில் கண்ட பிறநாட்டுப் படையினரை ஈவிரக்கமின்றி கொன்ற செங்கிஸ்கானுடன் வந்து, ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் குடியேறியவர்கள்தான் ஹஜாராக்கள். மங்கோலியாவிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்பட்டாலும் சீனர்கள், கொரியர்கள், ஜப்பானியர்களைப் போல மங்கோலிய முக அமைப்பு கொண்டவர்களோ பவுத்தத்தைப் பின்பற்றுபவர்களோ அல்ல ஹஜாராக்கள். இவர்கள் பழங்குடிகளாக இருந்து பிறகு இஸ்லாத்தைத் தழுவியவர்கள். இவர்கள் துருக்கி – மங்கோலிய இனங்களின் கலப்பு என்றும் சொல்கின்றனர். இவர்கள் பேசும் மொழி பாரசீக மொழியை ஒட்டிய பேச்சு வழக்கிலானது.

சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு ஹஜாராக்களைப் பிடிக்காமல் போனதற்கு முதல் காரணம், இவர்கள் ஷியாக்களாக இருப்பது. அடுத்தது இவர்கள் இசை, கவிதை, பழமொழிகளில் ஆர்வமும் புலமையும் மிக்கவர்கள். கண் திருஷ்டி (கொள்ளிக் கண்), பேய்கள் ஆகியவற்றை நம்புகிற பழமைவாதிகள். ஆங்கிலேயர்களின் அறிமுகத்துக்குப் பிறகு நவீனக் கல்வி, ஜனநாயக நடைமுறைகள் ஆகியவற்றை ஆதரித்தவர்கள். இவர்களை ஒடுக்குவதை சன்னி பிரிவினர் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் தங்களுடைய முக்கியக் கடமையாகவே கருதி நிறைவேற்றுகின்றனர். எனவேதான் தாலிபான்கள் கையில் முழு ஆட்சி வந்துவிட்ட சூழலில், இனி ஆப்கானிஸ்தானில் இருந்தால் இனத்தோடு அழித்துவிடுவார்கள் என்று பயந்து, பல ஹஜாராக்கள் புறப்பட்டுவிட்டனர். ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் சரிபாதி பஷ்டூன் இனத்தவர்கள். இவர்களைப் பக்டூன்கள் என்றும் பட்டாணியர்கள் என்றும் பத்தான்கள் என்றும் அழைப்பார்கள். பஷ்டூன்களின் பெயர்களிலும் இந்தியாவின் ராஜபுத்திரர்களின் பெயர்களிலும் சில ஒற்றுமைகள் இருப்பதை, ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய ஹென்றி வால்டர் பெல்லு (1834-1892) என்ற மருத்துவர் கட்டுரை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.

வேட்டையாடப்படும் இனக்குழு

ஹஜாராக்கள் அனைவரும் வீடு, மனை, நிலம் போன்றவற்றை விற்க முடியாவிட்டாலும் நகைகள், பண்டபாத்திரங்கள், வாகனங்கள், தொழில் கருவிகளைக் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் முதலில் செல்கின்றனர். அங்கு குவெட்டா மாவட்டத்துக்குச் சென்று அங்கிருந்து ஈரானுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். இப்போது அகதிகளாக வருகிறவர்களைப் பாகிஸ்தான் எல்லைக்கும் அங்கிருந்து ஈரானிய எல்லைக்கும் வேன், லாரி, மோட்டார் சைக்கிள்களில் கொண்டுபோய் சேர்ப்பது குறுகிய காலப் பெருந்தொழிலாகிவிட்டது. தகப்பனாரோ, கணவரோ வீடு திரும்பவில்லை என்றால் இந்தச் சமூகத்துப் பெண்கள் தம்பி, தங்கைகள், குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லை நோக்கிப் போக ஆரம்பிக்கின்றனர்.

தாலிபான்கள் 3 வகை மக்களைக் குறிவைத்து வேட்டையாடுகின்றனர். முதலாவது பிரிவினர் ஹஜாராக்கள். 2-வது பிரிவினர் முன்பு ஆப்கானிஸ்தானை ஆண்ட கனியின் ஆதரவாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறை, ராணுவம் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்பில் இருந்தபோது தாலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்கள் ஆகியோர். 3-வது பிரிவினர், தாலிபான்கள் முன்னர் ஆண்டபோது எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுத்தனரோ அதையெல்லாம் அமெரிக்க ராணுவம் இருக்கும் துணிச்சலில் செய்தவர்கள். விளையாட்டு வீரர்கள், அழகு நிலையம் நடத்தியவர்கள், மகளிர் கல்வி – வேலைவாய்ப்பு போன்றவற்றை ஆதரித்தவர்கள், கலை – இலக்கியப் பிரிவுகளை வளர்க்க முற்பட்டவர்கள், பொழுதுபோக்குத் துறையில் ஈடுபட்டவர்கள். எனவே, ஹஜாராக்கள் மட்டுமின்றி பிற சமூகத்தவரிலும் இப்படி அடையாளமிடப்பட்டவர்கள் உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடுகின்றனர். தாலிபான்களால் காபூல் கைப்பற்றப்பட்ட பின்னர் விமானத்தின் கூரைகளிலும், இறக்கைகளிலும் அமர்ந்து பயணித்து கீழே விழுந்து மரணமடைந்தவர்களின் கதையே இதற்கு உதாரணம்.

சித்திரவதை, கொலை, அச்சுறுத்தல்...

குவெட்டாவில் ஹஜாராக்கள் 5 லட்சம் பேர் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானைப் போலத்தான் பாகிஸ்தானிலும் ஹஜாராக்களை ஒடுக்குகின்றனர். ஆனால், அவர்கள் மக்கள்தொகை அதிகமாக வாழும் இடங்களில் தாக்குதல்கள் குறைவு. ஹஜாராக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் தாங்கள் வசித்த மத்திய மலைப்பிரதேசங்களில் மலைச் சுவர்களில் செதுக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகளை, கலை வடிவமாகப் பார்த்து பாதுகாத்துவந்தனர். 1996 – 2000 காலத்தில் ஆட்சி செய்த தாலிபான்கள், இவர்களைச் சித்திரவதை செய்ததோடு பாமியான் புத்தர் சிலைகளையும் பீரங்கிகளால் சுட்டு சிதைத்தனர். 1998-ல் மஜார்இ ஷெரீஃப் என்ற இடத்தில் ஏராளமான ஹஜாராக்களைச் சித்திரவதை செய்து கொன்று, அவர்களுக்கு நிரந்தர அச்சத்தை ஏற்படுத்திவிட்டனர். இந்த முறை அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதிகளாகக் கொண்ட அரசை அமைப்போம் என்று தாலிபான்கள் உறுதி கூறிய பிறகும் கூட, ஹஜாராக்கள் நம்பிக்கை பெறவில்லை.

கடந்த ஆகஸ்ட் 15-ல் ஆட்சியை முழுவதாகக் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே, ஹேரட் நகரிலும் பிறகு காபூலிலும் ஹஜாராக்களில் சில தலைவர்களைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்றனர் தாலிபான்கள். அந்தச் செய்தி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவாமலிருக்க மொபைல் சேவைகளையே துண்டித்தனர். சமீபத்தில் அகதிகளாக வரத் தொடங்கியிருப்பவர்கள் பஞ்சாபியர்கள். இவர்கள், சீக்கியர்களா அல்லது பாகிஸ்தானின் பஞ்சாபிலிருந்து குடியேறிய ஷியாக்களா என்று தெரியவில்லை. ஆனால், இவர்கள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஈரான் செல்லவே முன்னுரிமை தருகின்றனர்.

சமன் எல்லை நோக்கி…

காபூலிலிருந்துகூட பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஸ்பின்போல்டாக் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து பாகிஸ்தானின் சமன் எல்லைக்கு ஹஜாராக்கள் செல்கின்றனர். பாகிஸ்தானில், ஏற்கெனவே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அகதிகளாகக் குவிந்துவிட்டனர் என்றாலும் பாகிஸ்தான் எல்லைப் படையினரால் ஆப்கானியர்களை முழுதாகத் தடுக்க முடியவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து ஈரானுக்கு அல்லது ஈரானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கோ செல்வதாகக் கூறுவதால், கண்டும் காணாமலும் போக அனுமதிக்கின்றனர் பாகிஸ்தான் அதிகாரிகள். தாலிபான்களும் பாகிஸ்தான் எல்லைகளில் அதிகம் கடுமை காட்டாமல், அதே சமயம் அன்றாடம் எத்தனை பேர் வெளியேறுகின்றனர் என்று நோட்டம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வேன் அல்லது லாரியில் செல்ல ஒரு குடும்பம் அல்லது பெரிய கூட்டத்துக்கு 60,000 ரூபாய் வரை வேன், லாரி உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். கிட்டத்தட்ட 600 கிலோமீட்டர் தொலைவுள்ள இந்தப் பயணத்தை முடிக்க 12 அல்லது 14 மணி நேரம் ஆகிறது. போகிற வழியில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள். அவற்றில் தாலிபான்கள் நடத்துவது, பல இனக்குழுக்கள் நடத்துவது என்று ஏராளமாக உள்ளன. சாலையும் குண்டும் குழியுமாகத்தான் இருக்கிறது. நல்ல உடல் நிலையில் இருப்பவர்களே சோர்ந்துவிடுகின்றனர். முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என எல்லோரும் இவற்றில் செல்ல வேண்டியிருக்கிறது. வாகனச் செலவுக்கே பணம் அதிகம் செலவாவதால், பல குடும்பத்தினர் போதிய உணவு, தண்ணீர் கொண்டுசெல்வதில்லை.

அன்றாடம் இந்தப் பயணங்களில் இறுதிக் கட்டத்தை எட்டும்போது பசி, தாகத்தால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் அடங்குகிறது. இவர்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஈரான் எல்லை வரையில் வேன், லாரிகளில் செல்ல ஒருவருக்கு 10,000 முதல் 12,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அங்கே இறுதியாக, 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒவ்வொருவராக ஏற்றிச் செல்ல பைக்குடன் இருப்பவர்கள் தலா ஆயிரம் ரூபாய் வாங்குகின்றனர். வேன், லாரி ஓட்டுநர்கள் அன்றாடம் 2 ஷிப்டுகளில் வேலை செய்கின்றனர். திருவிழாவுக்குச் செல்வதைப்போல ஹஜாராக்கள் ஆயிரக்கணக்கில் வரிசை வரிசையாகச் செல்கின்றனர். செல்கிறவர்கள் அதிக சுமைகளை எடுத்துச் செல்வதில்லை. சுமைகள் இருந்தால் வழியில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று துணிமணிகள், பண்ட பாத்திரங்கள்கூட இல்லாமல் செல்கின்றனர்.

நிதியுதவி அவசியம்

ஆப்கானிஸ்தான் அரசுக்கு உடனடியாக உணவு, மருந்துப் பொருள்கள், நிதியுதவி தேவைப்படுகின்றன. தாலிபான்கள் தங்களுடைய பேச்சுப்படி, ஆனைத்து சமூக மக்களுக்கும் பாதுகாவலர்களாக இருந்தால்தான் சர்வதேச சமூகம் அவர்களை ஆதரிக்க முடியும். மனிதாபிமானப் பிரச்சினையில் உதவுங்கள் என்று தாலிபான்கள் பிற நாடுகளைக் கேட்பதைப்போல, தாங்களும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தனி நபர்களின் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துவதும் பெண்களை வீட்டில் அடிமைகளாக அடைத்து வைப்பதும் கூடாது என்பதே, பிற நாட்டவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும், கோவிட் உள்ளிட்டவற்றுக்குத் தடுப்பூசிகள், வழக்கமான தொற்றும் – தொற்றாத நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் தரப்பட வேண்டும் – அவை கையிருப்பில் வெகுவாக குறைந்துவிட்டன என்று செம்பிறைச் சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களில் 97 சதவீதம் பேர், இன்னும் ஓராண்டுக்குள் வறுமைக் கோட்டுக்கும் கீழே சென்றுவிடுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட முகமை எச்சரிக்கிறது.

மனிதர்கள் சக மனிதர்களாலேயே இப்படி அல்லலுறுவதைக் காட்டிலும் வேறு என்ன துயர் இருக்கிறது?

Related Stories

No stories found.