மனிதம் மரத்துப்போனதா?... உலகம் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது... முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளிலும் பலி எண்ணிக்கை 4,200ஐ கடந்துள்ளது. போருக்கு நடுவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இந்த சூழலில் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இஸ்ரேல் படை
இஸ்ரேல் படை

இந்த நிலையில், காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போர் என்பதே கொடூரமானது!. அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?. உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது.

ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in