அமெரிக்காவில் பயங்கரம்: ஹாலோவீன் இரவில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்

அமெரிக்காவில் பயங்கரம்: ஹாலோவீன் இரவில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்

அமெரிக்காவின் சிகாகோ மற்றும் கன்சாஸ் நகரங்களில் நேற்று இரவு நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இல்லினாய் மாநிலத்தில் உள்ள சிகாகோ நகரில் உள்ள கேர்ஃபீல்ட் பார்க்கில் நேற்று இரவு ஹாலோவீன் கொண்ட்டாட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, கறுப்பு நிற காரில் வந்த இருவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர். நேற்று இரவு 9.30 மணி அளவில் நடந்த இந்தத் தாக்குதலில், 3 வயது குழந்தை, 11 வயது சிறுவன், பதின்மவயது சிறுவன் உட்பட 15 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட களேபரத்தில் ஒரு கார் மோதியதில் ஒரு நபர் காயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

மிசெளரி மாநிலத்தில் உள்ள கன்சாஸ் நகரில் உள்ள ஒரு மாளிகையில் நேற்று இரவு நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தில் சுமார் 100 இளைஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது சில மர்ம நபர்கள் அங்கு நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து வெளியேறுமாறு அந்த மாளிகையின் உரிமையாளர்கள் அவர்களிடம் சொன்னபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 7 பேர் காயமடைந்தனர்.

தென் கொரியத் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 154 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக, இந்த ஆண்டில் நடந்த பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் துப்பாக்கிக்குக் கட்டுப்பாடு கொண்டுவருவது குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in