பாலியல் வழக்கு: தனுஷ்காவுக்கு நிபந்தனை ஜாமீன்; பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்திக்கத் தடை!

பாலியல் வழக்கு: தனுஷ்காவுக்கு நிபந்தனை ஜாமீன்; பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்திக்கத் தடை!

பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியக் காவல் துறையால் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், அவர் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த தனுஷ்கா குணதிலகா, சிட்னியில் தங்கியிருந்தார். அப்போது டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

நவம்பர் 2-ம் தேதி அப்பெண்ணுடன் வெளியில் சாப்பிடச் சென்ற தனுஷ்கா, பின்னர் அப்பெண்ணின் சென்றபோது அவரது சம்மதம் பெறாமல் வலுக்கட்டாயமாகப் பாலியல் உறவு கொண்டதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமையின்போது தனது கழுத்தை நெரித்ததாகவும், ஆணுறை அணிந்திருக்கவில்லை என்றும் தனுஷ்கா மீது அந்தப் பெண் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து நவம்பர் 6-ல் தனுஷ்கா கைதுசெய்யப்பட்டார்.

சிட்னியின் புறநகர்ப் பகுதியில் உள்ள பார்க்லீ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர், அங்கிருந்தபடி காணொலி வழியாக சிட்னியின் டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது நீதிபதி ஜானெட் வாஹ்ல்குயிஸ்ட் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதேசமயம், டிண்டர் உள்ளிட்ட டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 1,00,620 அமெரிக்க டாலர் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி. கூடவே, தினமும் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்; இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் நடமாடக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்திக்க முயற்சிக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

முன்னதாக, தனுஷ்காவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் விமானம் மூலம் தப்பிச் சென்றுவிடக்கூடும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரால் ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறிய அரசு வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், தனுஷ்காவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in