பால் வெளியில் நட்சத்திரங்களின் கல்லறை: அதிசயிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

பால் வெளியில் நட்சத்திரங்களின் கல்லறை: அதிசயிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

பால் வெளி விண்மீன் மண்டலத்தில், இறந்துபோன நட்சத்திரங்களின் தொகுப்பை சிட்னியைச் சேர்ந்த வானியலாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். தேவையான எரிபொருள் இல்லாததால் இயங்க முடியாமல் முடங்கிப்போய் இறந்துபோன ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இந்தப் பிரத்யேக இடத்தில் காணப்படுவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதுதொடர்பான ஆய்வறிக்கை, ‘ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி' எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது. சிட்னி வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான டேவிட் ஸ்வீனி இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்திருக்கிறார்.

பால் வெளியின் தோற்றத்தைவிடவும் வேறு மாதிரியான தோற்றத்துடன் இந்தக் கல்லறைப் பகுதியின் வரைபடம் காணப்படுகிறது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். சூரியனைப் போல 8 மடங்கு பெரிய நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்ததால் திடீரென செயலிழந்திருக்கின்றன. நமது பால் வெளி மண்டலத்திலேயே இந்த நட்சத்திரக் கல்லறை கண்டறியப்பட்டிருப்பதாக சிட்னி வானியலாளர்கள் கூறினாலும், பால் வெளியைவிடவும் மூன்று மடங்கு உயரமாக இந்தப் பகுதி இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த நட்சத்திரங்கள், பால் வெளி மண்டலம் இளமையாக இருந்தபோது உருவானவையாக இருக்கலாம் என்றும், அவற்றை உருவாக்கிய சூப்பர் நோவா நிகழ்வின்போது உருவாக்கப்பட்ட இந்த நட்சத்திரங்கள் பின்னர் இருள் பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால்தான் அறிவியல் ஆய்வுகளின் பார்வையில் இந்த நட்சத்திரக் கல்லறை நீண்டகாலமாகத் தென்படவில்லை என்றும் அவர்கள் கணிக்கின்றனர். ஏறத்தாழ 30 சதவீத நட்சத்திரங்கள் பால் வெளி மண்டலத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வியப்புடன் பதிவுசெய்திருக்கின்றனர்.

கல்லறையில் இருக்கும் இந்த நட்சத்திரங்கள் தற்போது கருந்துளையாக மாறிவருகின்றன. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளின் தொகுப்பை நீண்டகால ஆராய்ச்சியின் பின்னர் இந்த வானியலாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in