‘இணைந்து தீர்வு காண்போம், வாருங்கள்!’

அமைச்சரவையில் சேர அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்த கோத்தபய
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

இலங்கை அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கும் நிலையில், அமைச்சரவைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண தன்னுடன் இணைந்து பணிபுரியுமாறு அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் அதிபர் கோத்தபய ராஜபக்ச.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டையும், இதற்கு வழிவகுத்த அரசின் தவறான முடிவுகளையும் கண்டித்து மக்கள் உச்சகட்டப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், போலீஸாரின் கண்காணிப்பையும் கடும் கட்டுப்பாட்டையும் மீறி போராட்டம் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்திவருகின்றனர். அதிபர் கோத்தபயவும் அவரது குடும்பத்தினரும் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதற்கிடையே, பிரதமர் மகிந்த ராஜபக்ச, நேற்று பதவிவிலகிவிட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை எனப் பிரதமர் அலுவககம் விளக்கமளித்துவிட்டது.

இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, அண்ணன் சமல் ராஜபக்ச, தம்பி பசில் ராஜபக்ச உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் நேற்று இரவு ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் அளித்தனர்.

பல்வேறு பொருளாதாரக் காரணிகளும், உலகளாவிய நடப்புகளும் இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துவிட்டதாகக் கூறியிருக்கும் கோத்தபய, அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் இதற்குத் தீர்வு காணலாம் எனக் கூறியிருப்பதாக அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in