வெளிநாட்டுக்கு தப்பிச்செல்கிறார் கோத்தபய ராஜபக்ச: கடற்படை கப்பலில் செல்கிறது உடமைகள்?

வெளிநாட்டுக்கு தப்பிச்செல்கிறார் கோத்தபய ராஜபக்ச: கடற்படை கப்பலில் செல்கிறது உடமைகள்?

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச அவரது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலையில் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். இந்த சூழலில் அதிகாரப்பூர்வ மாளிகையில் இருந்த மாற்று வழியின் மூலமாக தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பத்திரமுல்லையில் உள்ள ராணுவ தளத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள கோத்தபய ராஜ்பக்சவுக்கு சொந்தமான பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை கப்பலில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராணுவத் தலைமையகம் உள்ளே விமானம் நிலையம் வழியாக கோத்தபய ராஜபக்ச குடும்பத்தினர் தப்பி சென்றதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். தற்போது இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் இலங்கை எம்.பி ரஜிதா சேனரத்னாவை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கோத்தபய ராஜபக்ச தப்பியோடியுள்ளார். இருப்பினும், போராட்டம் தீவிரமடையும் என உளவுத்துறை எச்சரித்த நிலையில் நேற்று இரவே கோத்தபய ராஜபக்ச ராணுவ தலைமையகத்துக்கு தப்பி சென்றதாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகி, ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னும் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை. தற்போதும் பல நாட்கள் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகக்கடுமையாக உயர்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in