அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே தப்பினார் கோத்தபய ராஜபக்ச... பரபரப்பு தகவல்கள்!

அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே தப்பினார் கோத்தபய ராஜபக்ச... பரபரப்பு தகவல்கள்!

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் அவரது மனைவியும் புதன்கிழமை காலை இலங்கையில் இருந்து விமானம் மூலமாக மாலத்தீவுக்குப் தப்பிசென்றதை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே அவர் தப்பி சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோத்தபய ராஜபக்ச இன்று தப்பியது தொடர்பாக இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அரசியலமைப்பு விதிகளின் கீழ் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் அதிபர் கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை மாலத்தீவுக்கு அழைத்துச் செல்ல இலங்கை விமானப்படை இன்று அதிகாலை விமானத்தை வழங்கியது" என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை மாலத்தீவின் தலைநகரான மாலே நகருக்குச் செல்லும் இலங்கை விமானப்படை விமானத்தில் தப்பி சென்றுள்ளார். முன்னதாக நேற்று அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்றபோது குடியேற்ற அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவரால் வெளியேற முடியவில்லை. இதற்கிடையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லையென்று இலங்கை சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டால் நாட்டில் இருந்து தப்பிக்க முடியாது என்ற காரணத்தால், அவர் பதவியை ராஜினாமா செய்யாமலேயே தனது அதிகாரங்களை பயன்படுத்தி தப்பியுள்ளார் என்பது விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது. இந்த சூழலில் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற பின்னர் கோத்தபய ராஜபக்ச ஏற்கெனவே கையெழுத்திட்ட ராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், “இலங்கையிலிருந்து வெளியேற கோத்தபய ராஜபக்சவுக்கு இந்தியா உதவியது என்ற ஆதாரமற்ற ஊடக அறிக்கைகளை திட்டவட்டமாக மறுக்கிறோம்” என தெரிவித்துள்ளது.

கோத்தபய ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச நேற்று விமானம் மூலமாக துபாய்க்கு தப்ப முயன்றார். அப்போது விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக ‘சில்க் ரூட்’ சிறப்பு விமானம் மூலம் தப்பும் அவரது திட்டம் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in