‘தவறு நடந்துவிட்டது... வருந்துகிறேன்’ - இறுதியில் ஒப்புக்கொண்ட இலங்கை அதிபர்!

‘தவறு நடந்துவிட்டது... வருந்துகிறேன்’ - இறுதியில் ஒப்புக்கொண்ட இலங்கை அதிபர்!

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று, அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் நடத்திவரும் போராட்டம் உச்சமடைந்திருக்கும் நிலையில், தனது தவறுகளால்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என பகிரங்கமாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். நேற்று புதிதாக 17 அமைச்சர்களை நியமித்த அதிபர் கோத்தபய, அவர்கள் மத்தியில் பேசும்போது இதைப் பற்றி மனம்திறந்து பேசியிருக்கிறார்.

மிக மோசமான பொருளாதார நெருக்கடி

1948-ல் சுதந்திரமடைந்த இலங்கை, அதன் பின்னர் நிதிச் சூழலை வலுவாக்கிக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கூடவே, உள்நாட்டுப் போர், ராணுவத்துக்கு அதிக நிதி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்து தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்கி உருவாக்கிய கட்டமைப்புகள், உரிய பலன் கிடைக்குமா எனச் சரியாகத் தெரியாமல் துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றின் கட்டுமானத்தில் பெரும் தொகை செலவழித்தது எனப் பல்வேறு பிரச்சினைகள் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தன.

அடுக்கடுக்கான தவறுகள்

அதிபர் கோத்தபய எடுத்த தவறான பொருளாதார நடவடிக்கைகள், ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம், வெளிநாட்டுக் கடன் என்பன உள்ளிட்ட பிரச்சினைகளின் காரணமாக ஏறத்தாழ திவாலாகும் நிலையில் இருக்கிறது இலங்கை. தனக்கு இருக்கும் மொத்த வெளிநாட்டுக் கடன்தொகையான 50 பில்லியன் அமெரிக்க டாலரில், 7 பில்லியன் டாலரை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கிடையே, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவைத்திருப்பதாகவும் இலங்கை அறிவித்திருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து உதவியை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இம்முடிவை இலங்கை அரசு எடுத்திருக்கிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட முடக்கமும், பொருளாதார நெருக்கடியின் முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது. அதற்கு முன்னதாக 2019-ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புகளும் இலங்கையின் சுற்றுலாவில் சரிவை ஏறப்டுத்தியிருந்தது. இதையடுத்து இலங்கையின் ஜிடிபி-யில் 10 சதவீதமாக இருக்கும் சுற்றுலாத் துறை பெரும் சரிவை எதிர்கொண்டது.

உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருள்களை இறக்குமதி மூலம் வெகுவாகச் சார்ந்திருக்கும் இலங்கையில், இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்த அதிபர் கோத்தபய எடுத்த முடிவு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியது. இயற்கை விவசாயத்தை முன்னிட்டு ரசாயன உரங்களைப் பயன்படுத்த கோத்தபய தடை விதித்தார். அவற்றை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இவை அனைத்தும் இலங்கையின் வேளாண் விளைச்சலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டன. அந்நியச் செலாவணிக் கையிருப்பும் கரைந்துகொண்டே வந்ததால், எரிபொருள், உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை திணறிவருகிறது. எரிபொருள் இல்லாததால் மின்உற்பத்தி முடங்கி இலங்கையில் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது.

இந்தியாவிடமிருந்து உதவிகள் கிடைத்தாலும், பன்னாட்டு நாணய நிதியத்தை அணுகினால்தான் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என ரனில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்திவந்தனர். எனினும், அந்த முடிவை கோத்தபய அரசு தள்ளிப்போட்டுக்கொண்டே வந்ததது. அதற்கு முக்கியக் காரணம், சுற்றுலாத் துறை எப்படியாவது மீண்டுவிடும்; சீனாவிடமிருந்து உதவிகள் கிடைக்கும் என்பதுதான்.

மக்களின் கோபத்தைத் தணிக்க சில முயற்சிகளை எடுத்த கோத்தபய, பதவி விலக மட்டும் முன்வரவில்லை. நெருக்கடி முற்றியதால், பன்னாட்டு நாணய நிதியத்தை அணுக இலங்கை அரசு தீர்மானித்துவிட்டது. பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கிக் குழு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கும் நிதியமைச்சர் அலி சப்ரி.

இந்நிலையில், புதிய அமைச்சர்களிடம் நேற்று பேசிய கோத்தபய, “கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாம் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். கோவிட் -19 பெருந்தொற்று, கடன் சுமை ஆகியவற்றுடன் நமது தரப்பில் நிகழ்ந்த தவறுகளும் இதற்குக் காரணம். அவை சரிசெய்யப்பட வேண்டும். தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற வேண்டியிருக்கிறது. மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது” என்றார்.

மேலும், “பன்னாட்டு நாணய நிதியத்தை முன்கூட்டியே அணுகியிருக்க வேண்டும். இலங்கையின் விவசாயத் துறையை முழுமையாக இயற்கை விவசாயமாக மாற்ற, ரசாயன உரங்களுக்குத் தடைவிதித்திருக்கக் கூடாது” என்று அவர் கூறினார். அத்துடன், “இந்தப் பொருளாதார நெருக்கடியால் மக்கள் இன்றைக்குக் கடுமையான அழுத்தத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்தச் சூழல் ஏற்பட்டதற்கு நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார் கோத்தபய.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in