உக்ரைன் போரால் உடைந்துபோன கோர்பச்சேவ்!

மனவருத்தத்துடன் மறைந்ததாக உதவியாளர் தகவல்
புதினுடன் கோர்பச்சேவ்
புதினுடன் கோர்பச்சேவ்

சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக இருந்த மிகையீல் கோர்பச்சேவ் ஆகஸ்ட் 30-ல் தனது 91-வது வயதில் காலமானார். முதுமையில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவே அவரது மரணம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அதையும் தாண்டி இறுதிக்காலத்தில், உக்ரைன் போரால் அவர் மிகவும் மனமுடைந்துபோனது அவரது மரணத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதை அவரது நீண்டகால உதவியாளரான பாவெல் பாலசென்கோ ஒரு பேட்டியில் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

பாவெல் பாலசென்கோ, கோர்பச்சேவின் உரையை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டவர். ஏறத்தாழ 37 ஆண்டுகள் கோர்பச்சேவுடன் அவர் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக, அமெரிக்கா - சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான மாநாடுகளில் கோர்பச்சேவின் உரைகளை மொழிபெயர்த்துச் சொன்னது அவர்தான்.

தற்போது 73 வயதாகும் பாலசென்கோ, சில மாதங்களுக்கு முன்பு கோர்பச்சேவைச் சந்தித்துப் பேசினார். கோர்பச்சேவின் மகள் ஐரினாவுடன் அடிக்கடிப் பேசுவார். சில வாரங்களுக்கு முன்னர் கோர்பச்சேவுடன் அவர் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் போர் தனக்கு ஏற்படுத்திய வேதனையையும் பாதிப்புகளையும் கோர்பச்சேவ் பகிர்ந்துகொண்டதாக பாலசென்கோ தெரிவித்திருக்கிறார்.

பாவெல் பாலசென்கோ
பாவெல் பாலசென்கோ

கோர்பச்சேவின் ஆட்சிக்காலத்தில்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டு, உக்ரைன், லாட்வியா. லித்துவேனியா உள்ளிட்ட 15 பிரதேசங்கள் தனி நாடுகளாக மாறின. அந்தக் காலகட்டத்தில் அந்தப் பிரதேசங்களின் ஒற்றுமையைப் பேணவே அவர் விரும்பினார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். எனினும், அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்களால் அதிருப்தியடைந்த அந்த பிரதேசங்கள் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும், அத்துடன் சோவியத் ஒன்றியம் எனும் சகாப்தம் முடிவுக்கு வந்ததும் வரலாறு.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு கோர்பச்சேவ் மீது இன்றும் பலர் குற்றம்சாட்டிவரும் நிலையில், அவரது முயற்சியால்தான் அமெரிக்காவுடனான பனிப்போர் முடிவுக்கு வந்தது என்றும், அணு ஆயுதப் போர் தடுக்கப்பட்டது என்றும் பாலசென்கோ வாதிடுகிறார். பாலசென்கோவைப் பொறுத்தவரை கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியம் எனும் கருத்தாக்கத்திலிருந்து வெளியே வரவில்லை. பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு தேடவே விரும்பினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் மக்கள் மீது சோவியத் ஒன்றிய ராணுவம் நிகழ்த்திய அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அவர்தான் காரணம் என லித்துவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் இன்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.

பாவெல் பாலசென்கோ
பாவெல் பாலசென்கோ

இன்னொரு புறம், உக்ரைனுடன் குடும்ப உறவுகள் கொண்ட ரஷ்யர்கள் இன்றைய உக்ரைன் போரை வெறுக்கிறார்கள். இந்தப் போரால் கோர்பச்சேவ் வருத்தமடைய அதுவும் ஒரு முக்கியக் காரணம். ஆம், அவரது மனைவி ரைஸாவின் தந்தை உக்ரைனைச் சேர்ந்தவர்.

உண்மையில், 2014-ல் உக்ரைனின் க்ரைமியாவை ரஷ்யா ஆக்கிரமித்துக்கொண்டு தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொண்டபோது அதை வரவேற்றவர் கோர்பச்சேவ். அதன் காரணமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தபோது கோர்பச்சேவ் அதை எதிர்த்தார். அவரது கருத்துகளால் கோபமடைந்த உக்ரைன் அரசு, அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடைவிதித்தது.

இத்தனைக்குப் பிறகும், சமீபகாலமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளால் அவர் மனமுடைந்திருந்தாகச் சொல்கிறார் பாலசென்கோ.

மிகையீல் கோர்பச்சேவ்
மிகையீல் கோர்பச்சேவ்

ரஷ்ய அதிபர் புதின் மீது நன்மதிப்பு கொண்டிருந்த கோர்பச்சேவ், ஊடகங்களை நசுக்கும் அரசின் நடவடிக்கைளை வெளிப்படையாக எதிர்த்ததுண்டு. எனினும், பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடங்கிய பின்னர் அது குறித்து கோர்பச்சேவ் வெளிப்படையாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. விரைவில் இந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என ரஷ்யர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்ததைத் தாண்டி வெளிப்படையாக அவர் புதினை விமர்சிக்கவில்லை. அதேசமயம், உக்ரைன் போர் அவரைப் பெரிதும் பாதித்துவிட்டது என்று பதிவுசெய்திருக்கிறார் பாலசென்கோ.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in