‘லொக்கேஷன் ட்ராக்கிங்’ விவகாரத்தில் 391.5 மில்லியன் டாலர் அபராதம் கட்டும் கூகுள்: என்ன நடந்தது?

‘லொக்கேஷன் ட்ராக்கிங்’ விவகாரத்தில் 391.5 மில்லியன் டாலர் அபராதம் கட்டும் கூகுள்: என்ன நடந்தது?

பயனர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் செயல்படுவது புதிதல்ல; சட்ட விதிகளை மீறிச் செயல்பட்டது அம்பலமாகி அபராதம் கட்டுவதும் புதிய விஷயமல்ல. ஆனால், இந்த முறை கூகுள் நிறுவனம் கட்டும் அபராதத் தொகை மிகப் பெரியது என்பதால் அதன் மீது பெரும் கவனக்குவிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆம். ‘லொக்கேஷ் ட்ராக்கிங்’ விவகாரத்தில் அமெரிக்காவின் 40 மாநிலங்களின் அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்குகளில் மொத்தம் 391.5 மில்லியன் டாலர் அபராதத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டிருக்கிறது கூகுள்.

பிரச்சினையின் பின்னணி

ஆண்ட்ராய்டு போனைப் பயன்படுத்துபவர்கள் ‘கூகுள் லொக்கேஷன்’ எனும் வசதியை ஆன் செய்துகொள்ள முடியும். அதாவது, ‘செட்டிங்ஸ்’ அமைப்புக்குள் சென்று கூகுள் செயலி அல்லது கூகுள் மேப்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, பயனாளர் எங்கு இருக்கிறார் எனக் கண்காணிக்கும் ‘லொக்கேஷன் அக்செஸ்’க்கான அனுமதியை வழங்கலாம் அல்லது மறுக்கலாம்.

அதேபோல், இன்னொருவருக்குத் தங்கள் இருப்பிடம் குறித்த தகவலைச் சொல்ல லொக்கேஷன் ஷேரிங் வசதியைப் பயன்படுத்தலாம். இவ்விஷயத்தில் பயனர் தனது இருப்பிடத்தைக் கண்காணித்துச் சொல்ல கூகுள் செயலிகளுக்கு ‘லொக்கேஷன் ட்ராக்கிங்’ எனும் வசதியை ஆன் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை கூகுள் கண்டறிந்து அதன்படி செயல்படும் என்றே கருதப்பட்டது. இதில்தான் அந்நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறது. அதாவது, பயனர் அந்த வசதியை ஆஃப் செய்து வைத்திருக்கும் நிலையிலும், அவர் எங்கெல்லாம் செல்கிறார் என்பதைத் தொடர்ந்து கண்காணித்திருக்கிறது; இணையத்தில் அவரது செயல்பாடுகள், தேடுதல்களை ஒற்றறிந்து அதற்கேற்ப விளம்பரங்களை அவரது பார்வையில் படுமாறு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் பல பில்லியன் டாலர் லாபம் பார்த்திருக்கிறது. குறைந்தபட்சம், 2014-ம் ஆண்டிலிருந்து அந்நிறுவனம் இந்த விதிமீறலில் ஈடுபட்டதாகத் தெரியவந்திருக்கிறது.

கூகுளின் இந்தச் செயல்பாடு 2018-ல் அசோஷியேட்டட் பிரஸ் ஊடக நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றின் மூலம் தெரியவந்தது. ‘லொக்கேஷன் ஹிஸ்டரி’ எனும் வசதியை ஆஃப் செய்த பின்னரும் பலரது இருப்பிடங்களை கூகுள் கண்காணித்ததாக அந்தச் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகப் பெரிய தொகை

இதையடுத்து, பயனர்களைத் தவறாக வழிநடத்துவதாக அரிசோனா மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர் மார்க் ப்ரோனோவிச் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கடந்த மாதம்தான் 85 மில்லியன் டாலர் அபராதத் தொகையை கூகுள் நிறுவனம் செலுத்தியது. இதையடுத்து, அமெரிக்காவின் பிற மாநிலங்களின் தலைமை வழக்கறிஞர்களும், கொலம்பியா மாவட்ட நிர்வாகமும் தனித்தனியாக கூகுள் மீது வழக்கு தொடர்ந்தன.

அந்த வழக்குகளில்தான் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக வழங்க நவம்பர் 14-ல் கூகுள் ஒப்புக்கொண்டிருக்கிறது. நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் முன்னெடுத்த வழக்குகளில் வழங்கப்பட்டிருக்கும் மிக அதிகமான அபராதத் தொகை இது.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்திருக்கும் நிலையில், லொக்கேஷன் ட்ராக்கிங் வசதி குறித்து பயனர்களுக்கு விரிவாக விளக்கும் பணிகளை மேற்கொள்ளப்போவதாக கூகுள் உறுதியளித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in