தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை - தங்க நகை வியாபாரம் 50% குறைந்தது: ஓர் அலசல் ரிப்போர்ட்!

தங்க விலை நிலவரம்
தங்க விலை நிலவரம்தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை - தங்க நகை வியாபாரம் 50% குறைந்தது: ஓர் அலசல் ரிப்போர்ட்!
Updated on
2 min read

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதால் தங்க நகை வியாபாரம் 50 சதவீதம் வரை பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான நகைத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு 5550 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6055 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருப்பதால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே தங்க நகைகள் வாங்குவோர் வாங்கும் அளவை குறைத்து வாங்கி வருகின்றனர். 10 பவுன் வாங்க வருவோர் 6 அல்லது 7 பவுன் வரை மட்டும்தான் வாங்குகிறார்கள் என நகை கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் நகை பட்டறைகள் உள்ளன. சிறிய, பெரிய, நடுத்தரம் என 3500 நகை கடைகள் உள்ளன. தமிழகத்தில் கோவைக்கு அடுத்தப்படியாக சென்னை மற்றும் மதுரையில் நகை தயாரிப்பு உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. கோவையிலிருந்து மட்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஓராண்டுக்கு 100 டன் தங்க நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை எவ்வாறு நாளுக்கு நாள் உயருகிறதோ, அதே போல் தங்கம் மீதான மோகமும் மக்களிடையே படிப்படியாக குறைந்து வருகிறது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களுக்கு தங்கம் வாங்கும் நிர்பந்தம் இருப்பதாலேயே தற்போது தங்கம் வாங்குவோர் வேறு வழியில்லாமல் கடன் வாங்கியாவது தங்கம் வாங்க வேண்டும் என வாங்கிறார்கள் என நகைக் கடை உரிமையாளர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்க வியாபாரம் பல மடங்கு சரிந்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது... “ விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதால் மக்கள் அதிகமாக தங்க நகைகளை வாங்க தயங்குகின்றனர். இதனால் தங்க நகை வியாபாரம் 50 சதவீதம் வரை பாதித்துள்ளது. 50 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கம் மீதான விலை உயர்வுக்கு முக்கிய காரணமே உலக நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி தான். அண்டை நாடான இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்டவைகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து சற்று முன்னேறி வருகின்றனர். அதே போல் லண்டனும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சற்று முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதன் காரணமாக தொழில்துறையினரின் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறையும். இதன் காரணமாக தங்கத்தின் தேவை குறைந்து இறக்குமதி குறையும். அதன் பின்னரே தங்கம் விலை படிப்படியாக குறையும்.

ஜூன் மாதம் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேசங்கள் அதிகம் நடக்கும் மாதம். இந்த மாதம் பொதுவாக தங்க நகை விற்பனை அதிகரிக்கும். விலை ஏற்றம் காரணமாக தங்க நகை வாங்குவோர் அவர்களது அளவை குறைத்து வாங்குகின்றனர். இதனால் தங்க நகை தொழில் மிகவும் நெருக்கடியில் உள்ளது. தங்கம் விலை குறைவு அதனால் வெள்ளி வாங்குவோர் அதிகரிப்பார்கள் என்றால் அது கிடையாது. வெள்ளி விலையும் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. வெள்ளி நகை வியாபாரமும் சரிவு தான்.

தமிழகம் முழுவதும் தங்க நகை தொழில்களை மட்டுமே நம்பி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். கோவையில் மட்டும் நேரடியாக மற்றும் மறைமுகமாக என சுமார் 1 லட்சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலை நம்பி உள்ளனர். இவர்களது வாழ்வாதாரம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இது குறித்து நகை பட்டறை உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘ தங்க நகைப்பட்டறை மற்றும் அதனை சார்ந்து இருந்த தொழிலாளர்கள் பல பேர் தற்போது வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். வாரத்தில் 7 நாட்களும் வேலை இருந்தது போய் தற்போது 3 நாட்கள் மட்டுமே வேலை இருக்கிறது. வேலை தொடர்ந்து இல்லாத காரணத்தினால் பலரும் இந்த தொழிலை விட்டு சென்றுவிட்டனர். தங்கம் தொழில் நலிவடைந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தங்க நகை தயாரிப்பு தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். தங்கம் மீதான இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க வேண்டும்’’ என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in