இன்று உலக கை கழுவுதல் தினம் : கைகளை கழுவுவோம், உயிர்களை காப்பாற்றுவோம்!

கை கழுவுதல்
கை கழுவுதல்

கைகளை கழுவுவதன் மூலம் உயிரை காப்பாற்றி கொள்ளலாம் என்று கொரோனா காலத்துக்கு முன்னர் எவரேனும் சொல்லியிருப்பின், பலரும் வாய்விட்டு சிரித்திருப்பார்கள். ஆனால் கொரோனா தந்த பாடங்களில் ஒன்றாக கை கழுவுதலும் சேர்ந்திருக்கிறது. அக்டோபர் 15 அன்று சர்வதேசளவில் அனுசரிக்கப்படும், கை கழுவுதல் தினம் அதனை நாம் மறவாதிருக்க வலியுறுத்துகிறது.

கோடிகளை கொட்டியும் காப்பாற்ற வழியில்லாத கொரோனா பெருந்தொற்று பாதிப்பை, பத்து ரூபாய் சோப்பும், கொஞ்சமே தண்ணீரையும் கொண்டும் மனிதர்களால் தவிர்க்க முடிந்தது அப்போது ஆச்சரியம் தந்தது. இந்த பேருண்மையை, சகமனிதர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்தவர்கள் அவல நகைச்சுவையாக எதிர்கொண்டார்கள். தடுப்பூசி கண்டறியப்படும் வரை, கொரோனாவை அண்டவிடாது தவிர்ப்பதற்கு சோப் கொண்டு கை கழுவுவது பிரத்யேக உபாயமாக பரிந்துரைக்கப்பட்டது.

உலகளாவிய கை கழுவுதல் தினம்
உலகளாவிய கை கழுவுதல் தினம்

அதனை அலட்சியம் செய்தவர்களை கொரோனா அரக்கன் விழுங்கியது. கொரோனாவைத் தொடர்ந்து இன்னும் வீரியமான அதன் திரிபுகள், கொரோனாவுக்கு இணையான இன்னபிற வைரஸ், பாக்டீரியா உள்ளிட்டவை உலகைத் தாக்க வரிசையில் காத்திருக்கின்றன. இந்த இதர நுண்ணியிர் தொற்றுகளின் அச்சுறுத்தல் தொடரும் என்ற எச்சரிக்கையின் மத்தியில் நின்றபடியும், கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு பெறுவது மேலும் அவசியமாகிறது.

வளர்ந்த மற்றும் ஏழ்மை நாடுகளில் அதிகளவிலான உயிர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் பலியாவதற்கு, முறையாக கை கழுவும் பழக்கம் இல்லாததே காரணம் என கண்டறியப்பட்டது. இறப்புகளுக்கு வித்திடக் காரணமான வயிற்றுப்போக்கு முதல் சுவாச தொற்று மற்றும் காலரா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் சோப்புகள் கொண்டு கை கழுவுவதன் மூலம் நிவர்த்தி பெறலாம்.

2008, அக்.15-ல் உலகளாவிய கை கழுவுதல் தினம் அறிமுகமானபோது, உலகின் 70 நாடுகளைச் சேர்ந்த 12 கோடி குழந்தைகள் ஒரே நேரத்தில் கைகளை கழுவி, உலகளாவிய கை கழுவுதல் விழிப்புணர்வில் பங்கெடுத்தார்கள். அப்போது அதனை அலட்சியம் செய்தவர்கள் கூட, கொரோனா காலத்தில் உயிரச்சத்தோடு கைகளை அடிக்கடி கழுவிப் பழகினார்கள்.

கைகளை கழுவுவதன் மூலமே சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு வித்திடும் சிறப்பான வழிகாட்டுதல்களை, இந்த நாளில் பழக்கலாம். தனி நபர் சுகாதாரம் மட்டுமன்றி பொதுசுகாதாரத்திலும் கை கழுவுதலுக்கு முக்கிய இடம் உண்டு.

குழந்தைகளுக்கும் பழக்குவோம்
குழந்தைகளுக்கும் பழக்குவோம்

உலகளாவிய கை கழுவுதல் தினத்தின் 2023ம் ஆண்டுக்கான கருப்பொருள், ’சுத்தமான கைகள், எட்டும் தூரத்திலே இருக்கின்றன’ என்று நம்பிக்கையூட்டுகிறது. கை கழுவுதல் என்பதோடு அதனை முறையாக கழுவுவதும், கை சுகாதாரத்தின் மகத்துவம் அறிதலும் அவசியமாகிறது.

வீட்டிலிருக்கும் குழந்தைகள் மற்றும் அருகில் அறிந்த குழந்தைகள் ஆகியோருக்கு இன்றைய தினத்தில் கை கழுவுதல் பழக்கத்தை கற்றுக்கொடுப்போம். கொரோனா மட்டுமன்றி, அச்சுறுத்தும் இதர கிருமிகளிடம் இருந்தும் காப்பு பெறுவதில் உலகளாவிய கை கழுதல் தினம் மகத்துவம் பெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in