இருபாலர் சேர்ந்து படிக்கக் கூடாது!

தாலிபான் அடுத்த கட்டளை
இருபாலர் சேர்ந்து படிக்கக் கூடாது!
தி இந்து கோப்புப் படம்

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் பெண்கள் முதுகலைப் பட்ட வகுப்புகளில் கூட தொடர்ந்து படிக்கலாம். ஆனால், ஆண்கள் உள்ள வகுப்பறைகளில் சேர்ந்து படிக்கக் கூடாது என்று உயர் கல்வியமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

ஆண்களும் பெண்களும் ஒரே வகுப்பறையில் இருக்கும்போது நடுவில் திரையிடப்பட்டுக் கடந்த சில நாள்களாக வகுப்புகள் நடந்தன. இனி திரை கிடையாது, தனித்தனி வகுப்புகள்தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயர் கல்வி பயிலும் பெண்களும் இஸ்லாமிய மத நெறிப்படியான ஆடைகளைத்தான் வகுப்பறைகளிலும் அணிய வேண்டும் என்று புதிய ஆட்சியாளர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஹிஜாப் அணிந்தால் போதுமா அல்லது முகங்களையும் முழுதாக மூட வேண்டுமா என்று விளக்கப்படவில்லை.

”கடிகாரத்தை இருபதாண்டுகளுக்கு முன்னதாக திருப்பிவைக்க நாங்கள் விரும்பவில்லை, இப்போது என்ன நிலவுகிறதோ அதைக் கொண்டே புதிய இஸ்லாமிய நெறிப்படியான ஆட்சியைக் கட்டமைப்போம்” என்றார் ஹக்கானி. இனி இருபாலரும் சேர்ந்து பயில்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அறிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் இப்போது கற்றுத்தரப்படும் பாடங்களும் படிப்புகளும் மத நெறிக்கு உள்பட்டவையா என்று இனி ஆராயப்படும் என்றார்.

இருபதாண்டுகளுக்கு முன்னதாக தாலிபான்கள் ஆண்ட போது பெண்கள் படிக்கக் கூடாது, வேலைக்குப் போகக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். இசை, நடனம் உள்ளிட்ட கலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.