ஜியோர்ஜியா மெலோனி
ஜியோர்ஜியா மெலோனி

இத்தாலியின் முதல் பெண் பிரதமரானார் மெலோனி: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமைகிறது வலதுசாரி அரசு!

இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி இன்று பதவியேற்றுக்கொண்டார். தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்ட மெலோனி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதன் மூலம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக வலதுசாரி அரசு இத்தாலியில் அமைகிறது.

யார் இந்த மெலோனி?

1977 ஜனவரி 15-ல் ரோம் நகரில் பிறந்தவர் மெலோனி. வரி ஆலோசகராகப் பணியாற்றிவந்த அவரது தந்தை, மெலோனிக்கு 11 வயதாக இருந்தபோது குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசென்றார். 1992-ல், புதிய பாசிஸக் கொள்கை கொண்ட அரசியல் கட்சியான இத்தாலியன் சோஷியல் மூவ்மென்ட் (எம்எஸ்ஐ) எனும் கட்சியின் இளைஞர் பிரிவான யூத் ஃபிரன்ட் எனும் அமைப்பில் மெமோனி சேர்ந்தார். தீவிர வலதுசாரிச் சிந்தனையுடன் படிப்படியாக வளர்ந்த மெலோனி, 2006-ல் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்னேசியோ லா ருஸா, குய்டோ க்ரோசெட்டோ ஆகிய வலதுசாரித் தலைவர்களுடன் இணைந்து 2012-ல் ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சியைத் தொடங்கினார். 2014-ல் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்டம்பர் 25-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தலைமையிலான ‘இத்தாலியின் சகோதரர்கள்’ (Brothers of Italy) கட்சி அதிக இடங்களில் வென்றது. எனினும், பெரும்பான்மை பெறுவதற்கு பிற கட்சிகளின் துணை அவசியம் என்பதால், மாட்டெயோ சால்வினி தலைமையிலான லீக் கட்சி எனும் வலதுசாரிக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் ‘ஃபோர்ஸா இத்தாலியா’ எனும் பழமைவாத கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து அரசமைக்கிறார்.

ஜியோர்ஜியா மெலோனி
ஜியோர்ஜியா மெலோனி

உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் மெலோனி. இத்தாலி அதிபர் மாளிகையில் இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார்.

மூன்று முறை பிரதமராகப் பதவிவகித்த பெர்லுஸ்கோனியும் சரி, மாட்டெயோ சால்வினியும் சரி நீண்ட காலமாகவே ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். இப்படி அடிப்படை முரண்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து அமைக்கும் அரசு என்பதால் கூட்டணி அரசில் நிச்சயம் பிரச்சினைகள் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.

1922 முதல் பெனிட்டோ முசோலினி தலைமையில் பாசிஸ அரசு ஆட்சிசெய்தது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் முசோலினியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு முதன்முறையாக இத்தாலியில் பாசிஸ ஆட்சி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in