‘கீவின் பிசாசு என யாரும் இல்லை... அது கட்டுக்கதை’ - உண்மையை உடைத்த உக்ரைன்

‘கீவின் பிசாசு என யாரும் இல்லை... அது கட்டுக்கதை’ - உண்மையை உடைத்த உக்ரைன்
மேஜர் ஸ்டீபன் தாராபல்கா

பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய நிலையில், அன்றைய தினமே தனது மிக்-29 விமானத்தில் பறந்தபடி 10 ரஷ்யப் போர் விமானங்களை மேஜர் ஸ்டீபன் தாராபல்கா சுட்டு வீழ்த்தினார் எனத் தகவல்கள் வெளியாகின.

29 வயதான தாராபல்காவுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தப் போரில் மொத்தம் 40 ரஷ்ய விமானங்களை அவர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார் என உக்ரைன் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டன. மார்ச் 13-ம் தேதி ரஷ்யத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகச் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலை பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘டைம்ஸ் ஆஃப் லண்டன்’ நாளிதழ் வெளியிட்டது. முதலில் கீவின் பிசாசு என்று மட்டுமே அறியப்பட்டிருந்த நிலையில், அவரது முழுப் பெயர், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை அந்நாளிதழ் வெளியிட்டது. வீரதீரச் செயல்களுக்காக உக்ரைன் அரசு வழங்கும் உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆஃப் தி கோல்டன் ஸ்டார்’ எனும் விருது, அவரது மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

‘மக்கள் ‘கீவின் பிசாசு’ (Ghost Of Kyiv) என அவரை அழைக்கின்றனர். அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர்’ எனக் கடந்த மாதம் உக்ரைன் அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பாராட்டியிருந்தது.

மேற்கு உக்ரைனில் உள்ள கோரோலிவ்கா எனும் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் தாராபல்கா குறித்து, உத்வேகமூட்டும் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இளம் வயதிலிருந்தே விமானியாக வேண்டும் எனும் கனவுடன் வளர்ந்தவர் என்றும் பலர் குறிப்பிட்டனர். அது தொடர்பாக, சமூகவலைதளங்களில் பல உக்ரைன் அதிகாரிகளும் பதிவுகளை எழுதிவந்தனர்.

இந்நிலையில், தாராபல்கா கீவின் பிசாசு அல்ல; அவர் 40 ரஷ்யப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தவில்லை என உக்ரைன் விமானப் படை தெரிவித்திருக்கிறது.

‘கீவின் பிசாசு இன்னமும் உயிருடன்தான் இருக்கிறது. தலைநகர் கீவையும் பிராந்தியத்தையும் வெற்றிகரமாகப் பாதுகாத்துவரும் தந்திரோபாய விமானப் படையணியின் அதிகபட்சத் தகுதிவாய்ந்த விமானிகளின் ஒட்டுமொத்த ஆன்மாவாக அது திகழ்கிறது’ என உக்ரைன் விமானப் படை ட்வீட் செய்திருக்கிறது. “கீவின் பிசாசு எனும் பதம், ஒரு சூப்பர் ஹீரோ கதை. அந்தக் கதாபாத்திரம் உக்ரைனியர்களால் உருவாக்கப்பட்டது” என்றும் விளக்கமளித்திருக்கிறது.

தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் உக்ரைன் மக்களை விமானப் படை கேட்டுக்கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.