இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 23வது நாளாக மோதல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே காசாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்ததுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஹமாஸூடனான போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், தரைப்படை தாக்குதலை 2வது கட்ட முற்றுகையாக பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், காசாவிற்கு இணைய சேவைகள் வழங்கும் நடவடிக்கையை முடக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். 229 பேரை பிணையக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், விமானப்படை தாக்குதலில் சேதமடைந்த தொலைத் தொடர்பு கேபிள்கள் மீண்டும் சரி செய்யப்பட்டதை அடுத்து, காசாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.