‘எல்லோரும் இப்படியே ஆரம்பித்தால் எப்படி?’ - இந்தியாவைக் கண்டிக்கும் ஜி7

‘எல்லோரும் இப்படியே ஆரம்பித்தால் எப்படி?’ - இந்தியாவைக் கண்டிக்கும் ஜி7

கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்குத் திடீரென தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் இந்த முடிவுக்கு ஜி7 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். உக்ரைன் போரால் கோதுமை பற்றாக்குறையால் தவித்துக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கோதுமை ஏற்றுமதி கைகொடுத்துவந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு பல நாடுகளுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வெப்ப அலைகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் பெருமளவிலான கோதுமை வயல்கள் வெய்யிலில் வாடிக் கருகின. இந்த ஆண்டின் மார்ச் மாதம்தான், இந்தியா எதிர்கொண்ட கடும் வெப்பம் கொண்ட மார்ச் மாதம் எனக் கருதப்படுகிறது. இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கோதுமைப் பற்றாக்குறை உள்நாட்டிலேயே சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

அதன்படி வெள்ளிக்கிழமைக்கு (மே 13) முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகள் மட்டுமே இனி நடைபெறும். இனிமேல் அரசின் உரிய ஒப்புதல் பெற்றுத்தான் ஏற்றுமதியைத் தொடர முடியும். உணவுப் பாதுகாப்புத் தேவையைக் கருத்தில் கொண்டு பிற நாடுகள் கோரிக்கை வைத்து, மத்திய அரசு அனுமதியளித்தால் ஏற்றுமதி செய்ய முடியும்.

ரஷ்யத் தாக்குதலில் உக்ரைனின் ஒடெஸா, சோர்னோமோர்ஸ்க் உள்ளிட்ட துறைமுகங்களிலிருந்து கப்பல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியிருக்கிறது. போருக்கு முன்பு, கப்பல்கள் மூலம் 4.5 மில்லியன் டன் வேளாண் விளைபொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்துவந்தது. அதில் உலகின் கோதுமை தேவையில் 12 சதவீதம் பூர்த்தியாகிவந்தது. அதேபோல் 15 சதவீத சோளமும் ஏற்றுமதிசெய்யப்பட்டது. சூரியகாந்தி எண்ணெய்யும் கணிசமான அளவில் ஏற்றுமதியானது. உக்ரைன் போரால் அது பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. “உக்ரைனின் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி இல்லாததால் ஏற்கெனவே உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாடுகள் உணவுப் பற்றாக்குறை அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றன. போகப்போக, சூழல் இன்னமும் பயங்கரமாக இருக்கும்” என அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கியும் எச்சரித்திருந்தார்.

கோதுமைப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகருக்கு உக்ரைன் வேளாண் துறை அமைச்சர் சோல்ஸ்கி சென்றிருக்கிறார். அங்கு ஜி7 நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்களை இன்று அவர் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனி வேளாண் துறை அமைச்சர் செம் ஓஸ்டெமர், “இப்படி எல்லோரும் ஏற்றுமதியைத் தடை செய்தால் அல்லது சந்தையை மூடினால், அது நெருக்கடியை இன்னமும் மோசமடையச் செய்யும்” என கண்டனம் தெரிவித்தார்.

ஜூன் மாதம் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஜி7 நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in