‘இது போருக்கான யுகம் அல்ல’ - மோடியின் கருத்தை எதிரொலித்த ஜி20 தலைவர்கள்!

‘இது போருக்கான யுகம் அல்ல’ - மோடியின் கருத்தை எதிரொலித்த ஜி20 தலைவர்கள்!

ஜி20 மாநாட்டின் முடிவில் உறுப்பு நாடுகள் வெளியிட்டிருக்கும் கூட்டுப் பிரகடனம், இன்றைய யுகம் போருக்கானது அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது. சமீபத்தில், ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் பிரதமர் மோடி தெரிவித்த இந்தக் கருத்து தற்போது உலகத் தலைவர்களிடமிருந்து எதிரொலித்திருக்கிறது.

உலகின் முக்கியமான பொருளாதார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பு எடுக்கும் முடிவுகள் சர்வதேச அளவில் தாக்கம் செலுத்துபவை. நேற்றும் இன்றும் இந்தோனேசியாவின் பாலி மாகாணத்தில் பாலி, நுஸா டுவா, படூங் ரீஜென்ஸி நகரங்களில் ஜி20 மாநாட்டின் அமர்வுகள் நடைபெற்றன.

இந்த மாநாட்டில், உக்ரைன் போர் தொடர்பான உரைகள், விவாதங்கள் முக்கிய இடம் பிடித்தன. குறிப்பாக, போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள், உணவுப் பொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதைப் பல தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், மாநாட்டின் இறுதிநாளான இன்று இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் போருக்கு எதிரான குரல் வலுவாகப் பதிவாகியிருக்கிறது.

‘அணு ஆயுதங்களின் பயன்பாட்டையோ, அணு ஆயுத மிரட்டலையோ ஏற்க முடியாது. முரண்பாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது, பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முயற்சி எடுப்பது ஆகியவற்றுடன் ராஜதந்திர நடவடிக்கைகளும், பேச்சுவார்த்தையும் மிகவும் அவசியமானவை. இன்றைய யுகம் போருக்கான யுகம் அல்ல’ என்கிறது இந்தக் கூட்டறிக்கை.

ஏறத்தாழ இதே வார்த்தைகளை, செப்டம்பர் மாதம் நடந்த ஷாங்காய் மாநாட்டின்போது பிரதமர் மோடி பயன்படுத்தியிருந்தார். அம்மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் பேசிய மோடி, இது போருக்கான யுகம் அல்ல என்று வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய புதின், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டிருப்பதாகவும், பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தன்னாலான முயற்சியை ரஷ்யா செய்யும் என்றும் உறுதியளித்தார். எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

ஜி20 மாநாட்டின் பிரகடனத்தை வடிவமைத்ததில் இந்தியாவின் பங்கு பிரதானமானது என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் வினய் குவாத்ரா தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், உக்ரைன் போர் விஷயத்தில் ரஷ்யாவை இதுவரை இந்தியா கண்டிக்கவில்லை. மாறாக, இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in