கடவுளின் பெயரால் ஆசிரியர் குத்திக் கொலை... இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் பிரான்சில் எதிரொலித்ததில் புதிய பதற்றம்!

ஆசிரியர் கொல்லப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு வீரர்கள்
ஆசிரியர் கொல்லப்பட்ட பள்ளியில் பாதுகாப்பு வீரர்கள்

கடவுளின் பெயரால் ஆசிரியரை குத்திக் கொன்ற முன்னாள் மாணவனால், பிரான்ஸில் புதிய பதற்றம் தொற்றியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் எதிரொலியான இந்த சம்பவத்தால் பிரான்சின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹமாஸ் போராளிகள் சென்ற வாரம் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஹமாஸ் அமைப்பின் பிராந்தியமான காசாவை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. மத்திய கிழக்கில் குடிகொண்டுள்ள இந்த போர் பதற்றம், உலகின் இதர நாடுகளையும் தொற்றக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. குறிப்பாக யூதர்கள் மற்றும் இஸ்லாமியர் செறிந்திருக்கும் தேசங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளன.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்

பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரானும், 2 நாட்கள் முன்னதாக நாட்டு மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரான்ஸ் தேசத்தில் சர்ச்சை ஏதும் எழுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் பிரான்ஸ் பயந்தது நேற்று நடந்தது. பிரான்ஸின் அர்ராஸ் பகுதியில் செயல்படும் உயர்நிலைப் பள்ளியில் டொமினிக் பெர்னார்ட் என்னும் ஆசிரியரை, அப்பள்ளியின் முன்னாள் மாணவரான 20 வயதாகும் மொஹமத், கத்தியால் குத்திக் கொலை செய்தார். தடுக்க வந்த ஒரு ஆசிரியை மற்றும் பள்ளியின் பாதுகாவலர் மீதும் கத்தியால் குத்தினார்.

இந்த தாக்குதலில் ஆசிரியர் டொமினிக் பெர்னார்ட் பரிதாபமாக இறந்தார். கத்திக்குத்துக்கு ஆளான ஏனைய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவுளின் பெயரால் இந்த செயலை செய்வதாக அந்த இளைஞர் கத்தியபடி தாக்குதல்களை தொடர்ந்ததாக, நேரடி சாட்சிகள் போலீஸாரிடம் தெரிவித்திருக்கின்றன.

பள்ளியில் பார்வையிடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
பள்ளியில் பார்வையிடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

தான் எச்சரித்தபடியே துயரம் அரங்கேறியதை கண்டு, சம்பவம் நிகழ்ந்த பள்ளிக்கே அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சென்று பார்வையிட்டார். ஆசியரை கொன்ற மொஹமத் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் எதிரொலியாகவே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தற்போது இந்த வழக்கு பிரான்சின் பயங்கரவாத விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரான்சின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று அடைக்கப்பட்டது. பிரான்சின் பதற்றமுள்ள பகுதிகளில் 7,000 பாதுகாப்பு படையினர் ரோந்து வருகின்றனர். யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அர்ராஸ் பகுதியில் நடந்திருக்கும் இந்த துயர சம்பவத்தின் வெப்பம் இதர பகுதிகளில் பரவாதிருக்கவும், பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in