நீர்மூழ்கிக் கப்பல் விற்பனை கைமாறிய விவகாரம்; ஆஸ்திரேலியா, அமெரிக்காவைச் சாடும் பிரான்ஸ்

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

வட அட்லான்டிக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) என்ற அமைப்பில் ஆண்டுக்கணக்கில் அங்கம் வகித்த நாடான பிரான்ஸ், வியாபாரம் என்று வரும்போது நேச நாடுகள் துரோகம் செய்வதாகக் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பல் விற்பனை விவகாரத்தில் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் துரோகம் இழைத்துவிட்டதாக அந்நாடு குற்றம்சாட்டியிருக்கிறது.

கைமாறிய ஒப்பந்தம்

4,000 கோடி டாலர்கள் மதிப்புள்ள அணுவிசை நீர்மூழ்கிக் கப்பலை பிரான்சிடமிருந்து வாங்க ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட பேசி முடித்திருந்தது. இறுதி ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள பிரான்ஸ் காத்திருந்தது. இந்த நிலையில் இந்த நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்காவிடமிருந்து வாங்கிக்கொள்வதாக ஆஸ்திரேலியா அறிவித்துவிட்டது. இதனால் பிரான்ஸ் கடும் சீற்றம் அடைந்துள்ளது. அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து தங்களுடைய முதுகில் குத்திவிட்டதாகக் கடுமையாகச் சாடியிருக்கிறது. தனது கோபத்தை உணர்த்தும் வகையில் அமெரிக்காவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் தனது நாட்டுத் தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

இதுதொடர்பாக நேற்று (செப்.18) செய்தியாளர்களிடம் பேசிய பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன் எவ்ஸ் டிரியான், “ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் செயல் பொய், மோசடி, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம் என்று அனைத்தும் கலந்தது. தூதர்களைத் திரும்ப அழைத்த நடவடிக்கை எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கப் போதாது” என்றும் குறிப்பிட்டார்.

சரி, இந்த புதிய பேரத்தில் பிரிட்டனும் சேர்ந்திருக்கிறதே லண்டனிலிருந்தும் உங்களுடைய தூதரைத் திரும்ப அழைத்திருக்க வேண்டியதுதானே என்று நிருபர்கள் கேட்டனர். பிரிட்டன் எப்போதுமே சந்தர்ப்பவாத நாடு என்று எங்களுக்குத் தெரியும். எனவே பிரிட்டன் இதில் செயல்பட்ட விதம் குறித்து எங்களுக்கு வியப்போ, அதிர்ச்சியோ இல்லை என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு மாட்ரிட்டில் நடைபெறவிருக்கும் நேட்டோ கூட்டமைப்பு கூட்டத்தில் இந்த நீர்மூழ்கி பேரம் குறித்தும் விவாதிக்க நேரும் என்றார் அவர். ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதத்தில், “ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ராணுவ பாதுகாப்பு உத்தியை வகுப்பதுதான் இனி எங்களுடைய முன்னுரிமை” என்றார் ஜீன் எவ்ஸ் டிரியான்.

பேசித் தீர்க்கப்படும்

இதற்கிடையே, “பிரான்ஸ் எங்களுடைய முக்கியமான கூட்டாளி, கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்ப்போம்” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி நெட் பிரைஸ் கூறியிருக்கிறார். “நீர்மூழ்கிக் கப்பலை அதி நவீனத் தொழில்நுட்பத்துடன் வாங்க விரும்பியதால் அமெரிக்கா – பிரிட்டனுடன் பேசி முடிவு செய்தோம். பிரான்ஸுடன் மற்றவை குறித்துப் பேசுவோம்” என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அதிகாரி கூறியிருக்கிறார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா மூன்றும் இணைந்து ‘ஆக்கஸ்’ என்கிற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. “ஆக்கஸ் அமைப்பு உருப்படாது” என்று சீனா தன் பங்குக்கு வயிற்றெரிச்சலோடு கருத்து தெரிவித்துள்ளது. அது சரிதானோ என்று எண்ண வைக்கிறது பிரான்ஸின் சீற்றம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in