
4 ஆண்டுகள் இடைவெளியில் நாடு திரும்பியிருக்கிறார் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப். நொடித்திருக்கும் பாகிஸ்தான் தேசத்துக்கு அவரது வருகை நலம் செய்யுமா?
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு சிறையில் இருக்கிறார். அவருக்கு நிகழ்ந்த அனைத்துமே நவாஸ் ஷெரீப் முன்னதாக அனுபவத்திருக்கிறார். ஊழல் வழக்கில் கைதாகி 2018-ல் சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் மேல் சிகிச்சையின் பொருட்டு, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளிநாடு சென்றார். சிகிச்சை முடிந்த பிறகும் கொரோனாவை காரணமாக்கி லண்டனிலேயே தங்கி விட்டார்.
நவஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பாததற்கு காரணம் இம்ரான்கான். நவாஸை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு உயிரோடு இருந்தபோதும், இம்ரான்கானின் ஆட்சியில் நவாஸ் ஷெரீப் தாக்குப்பிடிக்க முடியாது என்று தாய்நாட்டுக்கான வருகையை ஒத்திப்போட்டார். காட்சிகள் மாறின. இம்ரான்கான் பதவியிலிருந்து அகற்றப்பட்டு அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கூட்டணிகளின் உதவியால் நவாஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி செய்தபோதும், அவரை இயக்கும் ரிமோட் லண்டனில் நவாஸ் கையில் இருந்தது. அமைச்சரவை மாற்றம் உட்பட அனைத்து அரசியல் மாற்றங்களும் நவாஸை கலந்த பிறகே பாகிஸ்தானில் அரங்கேறின. இம்ரான்கான் சிறையில், நவாஸ் தம்பி பிரதமர் நாற்காலியில் என்ற போதும் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவதை ஒத்திப்போட்டார். அவர் எதிர்பார்த்தபடியே கைது இல்லா ஜாமீனை பாகிஸ்தான் நீதிமன்றம் உறுதி செய்த பின்னர் இன்று நாடு திரும்பியிருக்கிறார்.
நவாஸ் ஷெரீப்புக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு தந்திருக்கின்றனர். அரசியலிலும், நிர்வாகத்திலும் ஆழ்ந்த அனுபவம் கொண்ட நவாஸின் நேரடி பங்கேற்பு, பொருளாதாரம் உட்பட பலவகையிலும் நொடித்திருக்கும் பாகிஸ்தானுக்கு உதவுமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டினர் காத்திருக்கின்றனர். அதற்கெல்லாம் நவாஸின் உடல்நிலையும், வயதும் உதவுமா என்பது கேள்விக்குறியே. நவாஸின் கணக்கு நாட்டை காப்பதை விட தன்னைக் காப்பாற்றிக்கொள்ள உதவும், ஜனவரி தேர்தலையே குறிவைத்திருக்கிறது.
தம்பி ஷெபாஸ் ஷெரீப், மகள் மரியம் ஷெரீப் என அடுத்தக்கட்ட தலைவர்கள் இருந்தபோதும், நவாஸ் ஷெரீப்பின் அரசியல் பங்கேற்பு அவரது முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என நம்பியிருக்கிறார்கள். சிறையில் இருக்கும் இம்ரான்கானும், அவரது ஆவேச ஆதரவாளர்களும் அதற்கு அனுமதிப்பார்களா என தெரியவில்லை. தலைக்குப்புற கிடக்கும் நாட்டை மீட்பதற்கு பதிலாக, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் மட்டுமே நவாஸ் ஷெரீப்பின் நகர்வுகள் அமையுமெனில், அந்த அதிகாரத்தை அவர் அடைந்த பிறகும் அதனால் பயனில்லாத சூழலையே நாட்டின் நெருக்கடி தர வாய்ப்பாகும்