ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: தீவிர சிகிச்சை அளித்தும் உயிர் பிரிந்தது

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: தீவிர சிகிச்சை அளித்தும் உயிர் பிரிந்தது

இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 371 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரா நகரில் இன்று காலை 11.30 மணி அளவில் யமாட்டோ சைடாய்ஜி ரயில் நிலையத்தின் முன்னே சாலையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஷின்ஸோ அபே கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவரை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார்.

ஷின்ஸோ அபேயின் நெஞ்சுப் பகுதியின் இடதுபாகத்திலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார் ஷின்ஸோ அபே. அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் ஓடிச் சென்று அவரைத் தூக்கினர். அவரது சட்டையில் ரத்தக் கறை படிந்திருந்தது. சுயநினைவிழந்து கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். நரா மாவட்டத்தில் உள்ள கஷிஹரா நகரில் உள்ள நரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

அவரது முக்கிய உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் வெளியான நிலையில் ஆபத்தான கட்டத்தில் இருந்த ஷின்ஸோ அபே உயிரிழந்ததாக தற்போது ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நீண்டகாலப் பிரதமர்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஷின்ஸோ அபே. ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராகப் பதவிவகித்தவர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. இந்தியாவுடனான நல்லுறவை வளர்த்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. குவாட் அமைப்பின் மூலம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை அவர் பேணிவந்தார். புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவில் தொடங்க அவர் முயற்சி எடுத்தார்.

உடல்நிலை மோசமானதால் 2020-ல் பதவி விலகினார். அவரது கட்சியைச் சேர்ந்த ஃபுமியோ கிஷிடா பிரதமராகப் பொறுப்பெற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in