‘இது வெளிநாட்டு சதி’ - இலங்கை நெருக்கடிக்குக் காரணம் சொல்லும் மகிந்த!

‘இது வெளிநாட்டு சதி’ - இலங்கை நெருக்கடிக்குக் காரணம் சொல்லும் மகிந்த!

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு வெளிநாட்டு சக்திகள்தான் காரணம் எனக் கூறியிருக்கிறார் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. உள்நாட்டு ஏஜென்ட்டுகளின் உதவியுடன் போராட்டங்களை வெளிநாட்டு சக்திகள் தூண்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

2019 முதல் பொருளாதார ரீதியாகத் தடுமாறிக்கொண்டிருந்த இலங்கை, கடந்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடியின் உச்சத்துக்குச் சென்றது. ஈஸ்டர் குண்டுவெடிப்புகள், கரோனா பரவல் போன்றவற்றுடன், அரசில் ஆதிக்கம் செலுத்திவந்த ராஜபக்ச குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகள், முறைகேடுகள் ஆகியவையும் இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என மக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் பதவி விலகினர். கடைசியாகப் பதவி விலகிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையைவிட்டுத் தப்பிச்சென்றார். ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். முதலில் பிரதமராக இருந்த அவர் பின்னர் அதிபரானார். ராஜபக்ச குடும்பத்தினர் அங்கம் வகிக்கும் இலங்கை பொதுஜன முன்னணி (எஸ்.எல்.பி.பி) கட்சிதான் இன்னமும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அக்கட்சி ஆதரவளித்திருக்கிறது.

இந்தியாவிடம் பெருமளவு உதவியைப் பெற்ற பின்னரும் தடுமாறிக்கொண்டிருந்த இலங்கை, பன்னாட்டு நாணய நிதியத்திடம் உதவி கோரி காத்திருக்கிறது. அவ்வப்போது மக்களிடமிருந்து எதிர்க்குரல்கள் எழுந்தாலும், முன்பு போல பெரிய அளவில் போராட்டங்கள் தற்போது நடப்பதில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு பசில், கோத்தபய இருவரும் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர்.

தற்போது தலைநகர் கொழும்புவில் இருக்கும் கோத்தபயவுக்கு அரசு சார்பில் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதேபோல், கடந்த வாரம் இலங்கை திரும்பிய பசில் ராஜபக்சவை காவல் துறை உயரதிகாரிகள் நேரடியாக விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றனர்.

இப்படியான சூழலில், 2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, அதிபரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கே நேற்று தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை தொடர்பான இரண்டாவது அமர்வு இன்று நடந்தது. அப்போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் வெளிநாட்டு சக்திகள்தான் என்றார்.

“இலங்கையின் தேசியச் சொத்துகள் மீது வெளிநாட்டு சக்திகள் கண்வைத்திருக்கின்றன. போராட்டங்களைத் தூண்டிவிட்டது அந்த சக்திகள்தான், அவர்களின் ‘உள்நாட்டு ஏஜென்ட்டுகள்’ போராட்டம் நடத்தினர். இதனால் இலங்கையின் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது அது மெல்ல மீண்டுவருகிறது” என்று அவர் கூறினார். ரணில் கொண்டுவந்திருக்கும் நிதிநிலை அறிக்கையையும் அவர் பாராட்டினார்.

கடந்த ஆண்டை ஒப்பிட, 10 சதவீதம் அதிகமாகப் பாதுகாப்புத் துறைக்கு ரணில் அரசு நிதி ஒதுக்கியிருப்பது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. ஆனால், அதை நியாயப்படுத்திப் பேசியிருக்கும் மகிந்த, நாட்டின் பாதுகாப்புக்குச் செலவிடுவதைவிட முக்கியமானது எதுவும் இல்லை என வாதிட்டிருக்கிறார்.

பன்னாட்டு நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன் டாலர் நிதியுதவியை இலங்கை எதிர்பார்த்து நீண்டகாலமாகக் காத்திருக்கிறது. உண்மையில், பன்னாட்டு நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்துவருகிறது ரணில் அரசு. ஆனால், இது விபரீத விளைவை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in