இப்படியெல்லாம் நடக்குமா?... கால்பந்து மைதானத்தில் வீரர் மின்னல் தாக்கி பலி: அதிர்ச்சி வீடியோ!

மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா
மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டிக்கு இடையே விளையாட்டு வீரர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலங்களில் போது மின்னல் தாக்கி பொதுமக்கள் உயிர் இழக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றன. மின்னல் தாக்கும் சமயங்களில் வெட்டவெளிகளில் நிற்கக்கூடாது, மரங்களின் அடியே நிற்கக்கூடாது என்பது போன்ற முன்னெச்சரிக்கை தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி உயிர் இழக்கும் சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

மிகவும் உயரமான கட்டிடங்களில் மின்னலை எதிர் கொள்வதற்காக லைட்னிங் ராட் எனப்படும் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வெட்டவெளியில் இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்பதால் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

அந்த வகையில் இந்தோனேஷியாவில் மைதானம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து வீரர் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங் பகுதியில் சிலிவாங்கி என்கிற மைதானத்தில் பாண்டுங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. மாலை 4.20 மணியளவில் இரு அணி வீரர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, கருமேகங்கள் சூழ்ந்து மோசமான வானிலை நிலவிய நிலையில் மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல்
மின்னல்

அப்போது சுபாங் அணியைச் சேர்ந்த 35 வயது கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்னல் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அவரை, உடன் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர், இந்த சம்பவம் சக விளையாட்டு வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செப்டெய்ன் மீது மின்னல் இறங்கும் காட்சி
செப்டெய்ன் மீது மின்னல் இறங்கும் காட்சி

மோசமான வானிலை காரணமாக வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்த நிலையில், மைதானத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் மின்னல் தோன்றியதாகவும், இதனால் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. இந்தோனேசியாவில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு மைதானத்தில் கால்பந்து வீரர் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில், அவர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in