80 ஆண்டுகளில் இல்லாத கனமழை; 7 பேர் உயிரிழப்பு: திணறும் தென் கொரியா!

80 ஆண்டுகளில் இல்லாத கனமழை; 7 பேர் உயிரிழப்பு: திணறும் தென் கொரியா!

தென் கொரியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, தலைநகர் சியோல் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். கோடைகாலத்தில் கனமழையை எதிர்கொள்வது தென் கொரியாவுக்குப் புதிதல்ல என்றாலும் தற்போது பெய்துவரும் மழையும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளமும் அந்நாட்டினரை நிலைகுலையச் செய்திருக்கின்றன. இந்த கனமழையில் இதுவரை 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எனினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

திங்கள் கிழமை இரவில், தலைநகர் சியோல், அதைச் சுற்றியுள்ள ஜியோங்கி மாகாணத்தின் பகுதிகள், துறைமுக நகரான இன்சோன் நகரிலும் ஒரு மணி நேரத்துக்கு 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்திருக்கிறது. சியோல் நகரம் அமைந்திருக்கும் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு 141.5 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்திருக்கிறது. இது கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மழை அளவு ஆகும். குறிப்பாக, தென் கொரியத் தலைநகர் சியோலின் சாலைகளில் ஆறுகளைப் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் நெருக்கியடித்தது. சில மெட்ரோ நிலையங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. மிரட்டும் வெள்ள பாதிப்புகள் அடங்கிய காணொலிகள், சமூகவலைதளங்களில் வைரலாகின. கங்க்னம் மாவட்டத்திலும் கனமழை பெய்தது.

குறைந்தபட்சம் நாளை (புதன்கிழமை) வரை கனமழை தொடரும் எனத் தென்கொரிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கங்க்வான், சங்சோங் போன்ற மாகாணங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

பருவநிலை மாற்றத்தின் விளைவு?

தென் கொரியாவில் கோடைகாலத்தில் கனமழை பெய்வது புதிதல்ல என்றாலும், பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இத்தகைய கனமழை பெய்கிறது என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பருவநிலை மாற்றத்தின் விளைவாகக் கோடைகாலம் நீண்ட நாட்களுக்கு நீடித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தென் கொரியாவின் அண்டை நாடான வட கொரியாவிலும் கனமழை பெய்துவருகிறது. தலைநகர் பியோங்யாங்கில் ஓடும் டேடோங் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in