கானாவில் பரவும் மார்பர்க்: கலக்கமூட்டும் இன்னொரு வைரஸ்!

கானாவில் பரவும் மார்பர்க்: கலக்கமூட்டும் இன்னொரு வைரஸ்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு பேருக்கு மார்பர்க் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதிக மரணங்களை ஏற்படுத்தும் எபோலா வைரஸ் போல இதுவும் மிகவும் ஆபத்தான வைரஸ் எனக் கருதப்படுகிறது.

ஜூலை மாதத் தொடக்கத்தில், அந்நாட்டின் தெற்குப் பிரதேசமான அஷாந்தியைச் சேர்ந்த இருவரிடம் மார்பர்க் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர்களின் ரத்த மாதிரிகள், அண்டை நாடான செனகலில் உள்ள பாஸ்டர் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டன.

அங்கு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகக் கூறியிருக்கும் கானா சுகாதாரத் துறைத் தலைவர் பேட்ரிக் குமா-அபோவாகயே, “கானாவில் மார்பர்க் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவது இதுவே முதன்முறை” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த இருவருடன் தொடர்பில் இருந்த 98 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

அது என்ன மார்பர்க்?

மார்பர்க் வைரஸுக்கும் எபோலா வைரஸுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எபோலா பாதிப்பை உண்டாக்கும் வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்தது இந்த மார்பர்க் வைரஸ். மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில் 1976-ல் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட வைரஸ் பாதிப்புக்கு அந்நதியின் பெயரே வைக்கப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வப்போது தலைகாட்டி வந்த எபோலா, விஸ்வரூம எடுத்தது 2014-ல்தான். அந்த ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினி, லைபீரியா, நைஜீரியா, சியாரா லியோன் போன்ற நாடுகளில் எபோலா தொற்றால் 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பயங்கரமான அந்த வைரஸ் எளிதில் தொற்றக்கூடியது மட்டுமல்ல, அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும். தொற்றுக்குள்ளானவர்களில் 50 சதவீதம் பேருக்கு மரணம் நிச்சயம் என்கிறார்கள் மருத்துவர்கள். எபோலா தொற்றுக்குள்ளானவர்கள் கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டு மரணமடைவார்கள்.

சில பண்டிகைகளின்போது காங்கோ மக்கள் குரங்கு ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டு ஆடுவார்கள். குரங்கு ரத்தத்தின் மூலம் எபோலா வைரஸ் பரவியிருக்கலாம் அல்லது குரங்குக் கடியின் மூலம் தொற்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 2019-ல் இதற்குத் தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னர் இந்த வைரஸ் தொற்று முடிவுக்கு வந்தது.

ஜெர்மனியில்...

தற்போது பரவிவரும் மார்பர்க் வைரஸும் எபோலா போலவே ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். 1967-ல் ஜெர்மனியின் மார்பர்க் நகரில்தான் முதன்முறையாக இந்த வைரஸ் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. அந்நகரின் பெயரே இந்த வைரஸுக்கு வைக்கப்பட்டுவிட்டது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவிலிருந்து ஆராய்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட பச்சை குரங்குகள் மூலம் மார்பர்க் நகரில் முதன்முறையாகத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அதன் பின்னர், அங்கோலா, காங்கோ, கென்யா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா போன்ற நாடுகளிலும் மார்பர்க் பரவியதுண்டு. 2021 செப்டம்பரில் கினியில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அறிகுறியும் ஆபத்தும்

மார்பர்க் தொற்றுக்குள்ளானவர்கள் கடுமையான காய்ச்சல் ஏற்படும். தாங்க முடியாத தலைவலியும் உண்டாகும். உடல் பாகங்களுக்குள்ளும் வெளியிலும் கடுமையான உதிரப்போக்கு ஏற்படும். இதற்கு முன்பு மார்பர்க் பரவியபோது, வைரஸ் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து 24 சதவீதம் முதல் 88 சதவீதம் வரை இறப்பு விகிதம் இருந்தது.

மார்பர்க் வைரஸ் தொற்றுக்குள்ளான வெளவால் போன்ற விலங்குகள் மூலம், மனிதர்களுக்கும் இதன் தொற்று ஏற்படும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. தொற்றுக்குள்ளான மனிதர் மூலம் பிறருக்கும் இந்த வைரஸ் பரவும். வெளவால்கள் வசிக்கும் குகைகள் போன்ற பகுதிகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும், அசைவ உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டும் என்றும் கானா மக்களுக்கு அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in